மோசடி செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த செயல் அலுவலர் சுதாகரை பணி நீக்கம் செய்த பின் மீண்டும் இந்து சமய அறநிலைத்துறை பணி வழங்கியது ஏப்படி ?

பணிநீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட மர்மம்: நாகை பிரம்மபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள்.
கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல முக்கியக் கோயில்களில் பணிபுரிந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சுதாகர் என்பவர் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வைத்து, மீண்டும் நாகை மாவட்டத்திற்குள் பணி மாறுதல் பெற்று வந்துள்ள அவர், இங்கும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அறநிலையத்துறைக்கு தொடர் புகார்கள் அனுப்பப்பட்டும், அவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆணையர் உத்தரவை மதிக்காத செயல் அலுவலர்:
நிர்வாகக் காரணங்களுக்காக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கூத்தனூர் அருள்மிகு மகா சரஸ்வதி அம்மன் திருக்கோயில் மற்றும் கோயில் திருமாளம் அருள்மிகு மஹாகாளநாதர் சுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டையும் அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து தனியாகப் பிரித்து, திருவாரூர் இணை ஆணையர் மண்டலத்துடன் இணைக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால், செயல் அலுவலர் சுதாகர் தனது அரசியல் மற்றும் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி, இந்த உத்தரவை மதிக்காமல் கோயில்களின் பொறுப்புகளைப் புதிய செயல் அலுவலர்களிடம் ஒப்படைக்க மறுத்து, தன் வசமே வைத்துள்ளார் என்று சமூக ஆர்வலர் செந்தில்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சுதாகர் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகளின் விவரம்:
அன்னதானத் திட்டத்தில் மோசடி:
கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், முத்துலட்சுமி என்ற பெயரில் பணியே செய்யாத ஒருவருக்கு போலியாகச் சம்பளம் வழங்கப்பட்டு நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தினமும் 25 பேருக்கு மட்டுமே உணவு வழங்கிவிட்டு, 50 பேருக்கு வழங்கியதாக மளிகைப் பொருட்கள் மற்றும் சிலிண்டர் கணக்கில் பொய் கணக்கு எழுதப்பட்டுள்ளது.
உபயதாரர் பணத்திற்கு அரசு பில்:
2024ல் கோயிலின் கழிவறைப் பாதைக்கு உபயதாரர்கள் (பக்தர்கள்) மூலம் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. ஆனால், இதனைத் திருக்கோயில் நிதியில் செய்ததாகக் கூறி 2 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
அன்னதானக் கூடத்தின் மேற்கூரை புதுப்பிக்கப்பட்டதாகக் கூறி ரூ. 80,000 போலியாகச் செலவு எழுதப்பட்டுள்ளது. ஆனால், மேற்கூரை பழைய நிலையிலேயே உள்ளது.
2025ல் நடைபெற்ற அருள்மிகு ஹரி நாதஸ்வர சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் அனைத்தையும் உபயதாரர்களே செய்த நிலையில், கோயில் நிதியிலிருந்து செய்ததாகக் கூறி ரூ. 5 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மரச்சாமான்கள் கொள்முதல்:
அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 50,000 மதிப்பிலான மரச்சாமான்களை வாங்கிவிட்டு, ரூ. 3 லட்சம் வரை போலியான பில்கள் தயாரித்துக் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
விதிமீறி திருமண மண்டப அனுமதி:
கோயில் திருமாளம் மஹாகாளநாதர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சன்னதி தெருவிலுள்ள 20,000 சதுர அடி இடத்தில், உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி தனிநபர் ஒருவர் திருமண மண்டபம் கட்ட பல லட்சம் ரூபாயும், அதற்கு மின் இணைப்பு பெற்றுத் தர ரூ. 3 லட்சமும் லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராமக் கோயில் நிதிகளிலும் கைவரிசை :
அரசு நிதி கையாடல்: 2024 ஆம் ஆண்டு பெத்தபாலூர் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் திருப்பணிக்காக அரசு ஒதுக்கிய ரூ. 2 லட்சம் நிதியை, கிராம மக்களே திருப்பணியை முடித்ததை அறிந்து, சுதாகர் முழுமையாகக் கையாடல் செய்துள்ளார்.
மாட்டிவிட்டு பணத்தைத் திருப்பிய விசித்திரம்:
உபய வேதாந்தபுரம் கிராம ஆதிதிராவிடர் கோயில் திருப்பணிக்குக் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் இருந்து வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் கையாடல் செய்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதும், பணியாளர்கள் சந்தானம் மற்றும் கரிகாலன் மூலமாகப் பணத்தைத் திரும்பச் செலுத்தியுள்ளார்.
பூஜைப் பொருட்கள் மற்றும் நவராத்திரி திருவிழா மோசடி:
ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இக்கோயிலில், ஒரு அம்பாள் சிலைக்கு மாதாந்திர பூஜைப் பொருட்களுக்காக ரூ. 80,000 செலவிடப்படுவதாகப் பொய் கணக்கு எழுதப்பட்டுள்ளது. உபயதாரர்கள் நடத்தும் 10 நாள் நவராத்திரித் திருவிழாவை நிர்வாகம் நடத்தியதாகக் கூறி, கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெயரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுப் பெருமளவு நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது.
போலி அச்சு ரசீதுகள் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள்.
கோயில் வரவு-செலவுகள் கணினிமயமாக்கப்பட்ட போதிலும், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மட்டும் இன்னும் அச்சு ரசீதுகளே வழங்கப்பட்டு வருகின்றன. கோயிலுக்குச் சொந்தமான நஞ்சை நிலங்களின் குத்தகை தாரர்களுக்குப் போலி அச்சு ரசீதுகளை வழங்கி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் ரூ. 1 கோடிக்கும் மேலான முதலீடுகளுக்குத் துறை கட்டணம் செலுத்த அறங்காவலர் குழு தீர்மானம் பெற்றும், அத்தொகையைச் செலுத்தாமல் போலியான செலவுகளைக் காட்டியுள்ளார்.
இத்தவறுகளைத் தட்டிக்கேட்கும் மற்றும் வெளியில் கொண்டு வர முயலும் கோயில் ஊழியர்களை, பேரளம் கோவிந்தச்சேரியைச் சேர்ந்த ஒரு யூடியூபரை வைத்து, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியும், ரீல்ஸ்கள் வெளியிட்டும் சுதாகர் மிரட்டி வருவதாக ஊழியர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கை.
பிரம்மன், இந்திரன், விசுவாமித்திரர் ஆகியோர் வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பல் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தற்போது முறைகேடுகளின் மொத்த உருவமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உடனடியாகத் தலையிட்டு, தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து இந்த ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட செயல் அலுவலரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்து துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

