Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை

0

'- Advertisement -

போக்குவரத்து நெரிசலை குறைக்க திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை

Ad banner

திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சை ரோட்டில் சாலையோரம் அமைந்துள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் சமூக ஆர்வலர் மனு அளித்து உள்ளார்.

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:

 

திருச்சி காந்தி மார்க்கெட் 24 மணி நேரமும் மிகவும் பரபரப்பு மிகுந்த பகுதியாகும். வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் தினமும் காய்கறிகள் இங்கு வந்து செல்கின்றன.

 

மேலும் சிறிய ரக சரக்கு வாகனங்களும் ஏராளமாக இங்கு தினமும் வந்து செல்லும். சில்லறை வியாபாரம் மற்றும் மொத்த வியாபாரமும் இங்கு நடைபெறுவதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்த இடம்.

 

இது தவிர திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூர் மார்க்கத்தில் செல்லும் நகரப் பேருந்துகள் இந்த காந்தி மார்க்கெட்டை கடந்து தான் செல்கின்றன.

 

அதேபோல் காய்கறி வாங்க வரும் உள்ளூர் மக்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் இங்கு வந்து செல்கின்றனர். வெளியூருக்கு சரக்குகளை அனுப்பும் லாரி புக்கிங் அலுவலகங்களும் காந்தி மார்க்கெட்டை சுற்றி அமைந்துள்ளன. இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதியாக திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது.

 

இது போன்ற நெருக்கடி காரணமாக தான் காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை தொடர்ந்து காந்தி மார்க்கெட் இதே இடத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உகந்ததாக இருக்கும். அதேசமயம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சிக்கல்களை அகற்ற வேண்டிய பொறுப்பு காவல் துறை வசம் உள்ளது.

 

திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக கருணாசாகர் இருந்தபோது, காந்தி மார்க்கெட் கமான் வளைவு உள்ளே நுழைந்து பழக்கடை சாலை வழியாக மீன் மார்க்கெட் அமைந்துள்ள பகுதிக்கு சென்று, தொடர்ந்து திருவெறும்பூர் பயணிக்கும் வகையில் நகர பேருந்துகளின் வழித்தடத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைத்தார்.

அதேபோல் திருவெறும்பூர் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் தஞ்சை ரோடு வழியாக மயிலம் சந்தை, வெல்ல்மண்டி, மரக்கடை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் சென்று வருகின்றன.

 

எனினும் சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், நகரப் பேருந்துகள், தள்ளு வண்டிகள் போன்ற வாகனங்களின் நெருக்கடியால் காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு மிகவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.

குறிப்பாக காந்தி மார்க்கெட்டில் இருந்து இடதுபுறம் திருவெறும்பூர் நோக்கி திரும்பியவுடன் காய்கறி கடைகள் வரிசையாக அமைந்துள்ளது. இது பெரும்பாலும் காந்தி மார்க்கெட் சுற்று சுவருக்கு வெளிப்புறத்தில் தகரக் கொட்டைகள் அமைத்து செயல்படுகின்றன. வழிநெடுகிலும் இதுபோல் காய்கறி கடைகள் காந்தி மார்க்கெட் சுற்று சுவரை ஒட்டி அமைந்துள்ளது.

 

இதனால் வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. அதேபோல் காந்தி மார்க்கெட் உள்ளே சென்று காய்கறிகளை வாங்காமல், வெளியிலேயே பொதுமக்கள் வாங்கி செல்லும் சூழல் உள்ளது, அதனால் இரு சக்கர வாகனங்களில் வருவோர் இந்த கடைகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்குகின்றனர். இதனால் மேலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிறது.

 

ஆகையால் காந்தி மார்க்கெட் இங்கேயே செயல்படுவதில் தவறில்லை. ஆனால் போக்குவரத்துக்கு நெருக்கடி இல்லாமல் காந்தி மார்க்கெட் சுற்றுச்சுவரை ஒட்டி செயல்படும் இந்த காய்கறி கடைகளை முற்றிலும் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றினால் காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு மிகப்பெரிய சாலையாக அமையும் வாகனங்கள் எளிதில் சென்று வர உதவியாக இருக்கும்.

ஆகவே மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஒருங்கிணைந்து காந்தி மார்க்கெட் சுற்றுச்சுவர் வெளியே செயல்படும் இந்த காய்கறிகளை முற்றிலும் அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.