திருச்சியில் தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் மின் கட்டண மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் (TNeCOA) சங்கத்தின் சிறப்பு கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டமும் திருச்சியில் உள்ள தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் இன்று ( 25.10.2026) ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் தலைவர் மூர்த்தி அவர்கள் தலைமையில், செயலாளர் சேவியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பொருளாளர் சரவணகுமார், துணைத் தலைவர்கள் ஜெயபிரகாஷ், அருள்செல்வம், கோபி, இணை செயலாளர்கள் லோகநாதன், சுரேஷ், கரோலினாள் மற்றும் 350க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கீழ்கண்ட 12 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது ….
1. புதிய இ-சேவை ஐடி வழங்க வேண்டும்!
டிஜிட்டல் சேவா போர்ட்டலில் (CSC) இ-சேவை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், இ-சேவைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ள எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, புதிய இ-சேவை ஐடிகளை வழங்க வேண்டும்.
2. சேவைக் கட்டணங்களை உயர்த்த வேண்டும்!
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் உள்ள சேவைக் கட்டணங்களை குறைந்தபட்சம் பின்வருமாறு உயர்த்த வேண்டும்:
– பொதுவான சேவைக் கட்டணம் – ₹150
– வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பக் கட்டணம் – ₹250
– பட்டா விண்ணப்பக் கட்டணம் – ₹350
3. மின் கட்டண மானியம் வழங்க வேண்டும்!
இ-சேவை மையங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும்.
4. இ-சேவை 2.0 மென்பொருளில் சங்கத்தின் பரிந்துரைகளைப் பரிசீலிக்க வேண்டும்!
இ-சேவை 2.0 மென்பொருளை வடிவமைக்கும் போது, எங்கள் சங்கத்தின் நிபுணர் குழு வழங்கும் பரிந்துரைகளைப் பரிசீலித்து செயல்படுத்த வேண்டும்.
5. இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்!
இ-சேவை மைய உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
6. குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை இ-சேவை மையங்களில் வழங்க வேண்டும்!
குடும்ப அட்டையில் புகைப்படம் மாற்றுதல், பெயர் திருத்தம் மற்றும் ஸ்மார்ட் குடும்ப அட்டை அச்சிடுதல் உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
7. பிறப்புச் சான்றிதழ் திருத்தங்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப வசதி வழங்க வேண்டும்!
பிறப்புச் சான்றிதழ்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும்!
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய இ-சேவை மையங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.
9. ஆதார் விவரங்களைத் திருத்த அனுமதி வழங்க வேண்டும்!
ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை மாற்றுவதற்கும் திருத்துவதற்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.
10. ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு சேவையை வழங்க அனுமதி வேண்டும்!
தகுதியுள்ள இ-சேவை மையங்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கும் பணிகளை வழங்க வேண்டும்.
11. உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மயமாக்க வேண்டும்!
மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளின் அனைத்து சேவைகளுக்கான விண்ணப்பங்களையும் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
பட்டா விண்ணப்ப நடைமுறையைப் போன்று, தேவையான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, சேவைக் கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
12. வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்!
கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி, ஆன்லைன் மூலம் பதிவைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்கம் (TNeCOA)
இ-சேவை மைய உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்!
கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

