முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி 313 ஜ நிறைவேற்றக்கோரி திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கைது.
திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கைது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 27 – ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம்:
ஒரு லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் – மறியல்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றிட வலியுறுத்தி இரண்டாம் கட்ட, ஒரு நாள் வேலை நிறுத்த தர்ணா மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில செயலாளர் எஸ்.ராணி தலைமை வகித்தார். இதில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக உடனடியாக அறிவித்திட வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு பணிக்கொடையாக பத்து லட்சமும் உதவியாளர்களுக்கு ஐந்து லட்சமும் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ஒன்பதாயிரம் வழங்கிட வேண்டும் மற்றும் மே மாத விடுமுறையை ஒரு மாதமாக வழங்கிட வேண்டும், மேலும் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களின் பதவி உயர்வை உடனடியாக வழங்கிடவும், பதவி உயர்வில் நேரடி நியமனத்தை கைவிட்டு 100% பதவி உயர்வை அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் வரும் 27 – ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர் 
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயலாளர் எஸ்.ராணி நிருபர்களிடம் கூறும்போது,
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். இன்று ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 2400 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்த மறியலில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் .
இந்த போராட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.ராணி, மாவட்ட தலைவர் மல்லிகா பேகம், மாநில துணைத்தலைவர் சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் போலீசார் விடுதலை செய்தனர்.

