Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தீர்ப்புக்கு முன் கதறி அழுத கிரீஷ்மா, மரண தண்டனை அறிவித்தவுடன் மௌனமானார்.

0

'- Advertisement -

 

திருவனந்தபுரம்: ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இன்று தண்டனையை வாசிக்கும் போது, அழத் தொடங்கிய குற்றவாளி கிரீஷ்மா, இறுதியில் தூக்கு தண்டனை என நீதிபதி அறிவித்ததும், அழுகையை நிறுத்தி கனத்த மௌனத்திற்குச் சென்றார்.

ஷாரோன் ராஜ் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே, கிரீஷ்மா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தனக்கு அதிகபட்ச மன்னிப்பை வழங்கவேண்டும் எனக் கோரினார் கிரீஷ்மா. இந்நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், அவரது மாமாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமன் நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் எனவும் கிரீஷ்மாவின் தாயார் சிந்து வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் நெய்யாற்றின்கரை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் கடந்த 17 ஆம் தேதி ஆணை பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான க்ரீஷ்மா தனது தாய் தந்தையருக்கு தான் ஒரே மகள் என்றும், தான் படிப்பைத் தொடர விரும்புவதாகவும், தனக்கு 24 வயது மட்டுமே ஆவதாகவும் தனது வயதை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அப்போது ஷாரோனுக்கு ஆதரவாக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றவாளி கிரீஷ்மா மனித குணத்தை மீறி அரக்க குணம் கொண்டு காதல் என்ற பெயரில் நம்ப வைத்து ஏமாற்றி இந்த கொலையை செய்துள்ளார். இதனால் ஒரு இளைஞன் கடுமையான துன்பங்களை அனுபவித்து இறந்துள்ளார். ஆகையால் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதனையடுத்து நீதிபதி தண்டனை விவரங்களை இன்று (திங்கட்கிழமை) அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை போலீசார் குற்றவாளிகள் கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமா நிர்மலகுமாரன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 11 மணிக்கு தீர்ப்பு வழங்க நீதிமன்றம் வந்த நீதிபதி பஷீர், முதல் வழக்காக ஷாரோன் கொலை வழக்கின் 586 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசிக்க துவங்கினார்.

“ஷாரோன் ராஜை மட்டுமல்ல, காதலின் உன்னதமான உணர்வையும் சேர்த்தே கிரீஷ்மா கொலை செய்துள்ளார். ஷாரோன் ராஜை, க்ரீஷ்மா காதல் என்ற பெயரில் நம்ப வைத்து வீட்டிற்கு அழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். ஒருமுறை இல்லை பலமுறை ஷாரோனை கொலை செய்ய முயன்று கொலை செய்து உள்ளார். ஆகையால் இது முற்றிலும் திட்டமிட்ட ஒரு
படுகொலை.

கிரீஷ்மா மீதான காதலுக்கு அடிமையாக இருந்த ஷாரோன் ராஜ், உள் உறுப்புகள் அழுகிய நிலையில், 11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப் படுக்கையில் இருந்தபோதும் காதலியை காட்டிக்கொடுக்கவில்லை. தான் இறந்தாலும், கிரீஷ்மா தண்டிக்கப்படுவதை ஷரோன் விரும்பவில்லை.

காதலுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ள கிரீஷ்மாவுக்கு தண்டனை அளிப்பதில் இருந்து, அவரின் வயதையோ, அவருக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதையோ கருத்தில் கொள்ள முடியாது. இறந்தவருக்கும் அதே வயது தான். எனவே கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது, அழத் தொடங்கிய குற்றவாளி கிரீஷ்மா, இறுதியில் மரண தண்டனை என நீதிபதி அறிவித்ததும், அழுகையை நிறுத்தி மௌனமானார். அதன்பிறகு, அவர் கண்கள் முழுக்க கண்ணீர் நிரம்பி இருந்தாலும் உணர்ச்சியற்ற நிலைக்குச் சென்றார்.

ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் காவல்துறையினர் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உள்ளனர் என நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.