அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழக்கில் திடீர் திருப்பம் . தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜியின் மனு தள்ளுபடி. 1 மாதத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடந்த வழக்கில் திடீர் திருப்பம் . தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜியின் மனு தள்ளுபடி.. 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவல்பட்டு விஜிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்ந்த தேர்தல் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கை தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யக் கோரி நவல்பட்டு விஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்பில் மகேஸ் 81,132 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி என்ற விஜயகுமார் 89,837 வாக்குகள் பெற்று 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈடுபடுத்தினார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி இந்த நவல்பட்டு விஜியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.
இதற்கிடையில், அன்பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி நவல்பட்டு விஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தவெக எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை முழுமையான விசாரணைக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, நவல்பட்டு விஜியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அத்துடன், அன்பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நவல்பட்டு விஜிக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.

