திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் உயர் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் உயர் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினர் ..
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள ஃப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உயர்தர சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம் குறித்து மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறுகையில்:
அனைத்துத் துறைகளையும் சேர்ந்த உயர் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரம்மாண்ட மருத்துவ முகாமை நடத்த முடிவு செய்து, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் பேராசிரியர் நிலையில் உள்ள பல்வேறு உயர் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறையில் நானும் ஒரு பேராசிரியராக இருக்கிறேன். இங்குள்ள அனைத்து வெளிநோயாளிகள் அறைகளிலும் அமர்ந்திருக்கும் மருத்துவர்கள் அனைவரும் உயர் சிறப்பு மருத்துவர்களே ஆவர்.
பொதுவாக மற்ற மருத்துவ முகாம்களில், எம்பிபிஎஸ் (MBBS) பட்டம் பெற்ற மருத்துவர்களை மட்டுமே பணியில் அமர்த்தியிருப்பார்கள். ஆனால், இங்கு அப்பாயிண்ட்மென்ட் பெற்று மட்டுமே பார்க்கக் கூடிய உயர் சிறப்பு மருத்துவர்களே நேரடியாக முகாம் நடத்தினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில்தான் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஆரம்பக் கட்டப் பரிசோதனை செய்யும் இடத்திலேயே அனைத்து விவரங்களும் சரியாகத் தெரிய வேண்டும் என்பதால், அந்த இடத்திலேயே நேரடியாகச் சிறப்பு மருத்துவர்களே வந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த முகாம் அமைக்கப்பட்டது. இம்முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு இருதயம், நுரையீரல், மூளை, தண்டுவடம், எலும்பு, மூட்டு, இரைப்பை, கல்லீரல், கணையம், குடல், மலவாய், இரத்தநாளம், மகப்பேறு, கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் சிறப்பு பேராசிரியர்கள் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு எக்கோ, இ.சி.ஜி, ஸ்கேன் , யூரோப்ளோமெட்ரி , இரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் பி.எம்.டி மூட்டு தேய்மான பரிசோதனை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டன. நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் என்றார்.

