அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும், திருச்சி மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வேண்டுகோள் ..

தமிழகம் முழுவதும் மாநகர் பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் .
திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர்குமார், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் உன்னதமான மழைநீர் சேமிப்பு திட்டம் கட்டாயமாக்கப்பட்டதுடன், தீவிரமாக ஆய்வுசெய்யபட்டது. ஆனால் அதற்கு அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக நாற்பது தொகுதியிலுமே படுதோல்வி அடைந்தது. அந்த தேர்தல் தோல்விக்கு அந்த காலகட்டத்தில் அதிமுக அரசு முன்னெடுத்த எஸ்மா-டெஸ்மா சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், ஆடு-கோழி தடைச்சட்டம், மழைநீர் சேமிப்பு திட்டத்தில் அரசு காட்டிய கடுமை உள்ளிட்ட கடுமையான சட்டங்களால் தான் தோல்வி என உளவுத்துறை தாக்கல் செய்த அறிக்கை வாயிலாக,
மிகவும் உன்னதமான எதிர்கால தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக முன்னெடுக்கப்பட்ட மழை நீர் சேமிப்பு திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.
தமிழகம் முழுவதும் மாநகர் பகுதிகளில் வீடுகள் தோறும் குறைந்தது ஒரு போர்வெல் வசதி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலத்தடி நீர் உருஞ்சபட்டதால் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம், இரண்டாயிரம் அடி அதலபாதாளத்தில் சென்றுவிட்டது. ஆனால் நிலத்தடி நீர் ஆதாரத்தை காக்கவோ, மேம்படுத்தவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது வேதனை.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தெருக்களும், சாலைகளும் சிமெண்ட் மற்றும் தார்சாலை காரணமாக மழை காலங்களில் பொழியும் நீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதன் காரணமாக மழை நீர் ஒரு சொட்டு கூட நிலத்தில் தயங்குவதில்லை என்பது குறிப்பிடதக்கது.
தற்பொழுது எல் நினோ, காலநிலை மாற்றம் காரணமாக மனித குலத்திற்கு மட்டுமின்றி பல்வேறு ஜீவராசிகளுக்கும் மிகபெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேலும் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை பார்த்து கவலைப்படும் நாம். இயற்கை அன்னை நமது எதிர்கால சந்ததியினர் பயன்படும் வகையில் நமது வீட்டிலேயே பொழியும் மழைநீரை நாம் சேமிக்க தவறுகிறோம். 
எனவே தமிழக முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தின் எதிர்கால நிலத்தடி நீர் ஆதாரத்தை மனதில் கொண்டு சேலார் மின் தேவைக்கு அரசு கொடுக்கும் மானியத்தை போன்று, மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கு சிறப்பு மானியத்துடன் தமிழகத்திலுள்ள மாநகர் பகுதிகளில் முதல் கட்டமாக ஒவ்வொரு வீடுதோறும் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்து நிலத்தடி நீரை சேகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என தனது அறிக்கையில் கூறியுள்ளார் ..

