திருச்சியில் இளம் பெண்ணிடம் ஆன்லைன் வியாபாரம் என ஆசை வார்த்தை கூறி ரூ.3 லட்சம் மோசடி
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண்.கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஒரு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து இவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை பிரியா என அறிமுகப்படுத்திக் கொண்டு இணையவழியில் வீட்டிலிருந்து செய்யும் வேலை ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண் அவருக்காக ஒதுக்கப்பட்ட வேலையை இணைய வழியில்
உடனடியாக செய்து முடித்தார். இதைத் தொடர்ந்து, மோகன் என்ற நபர், தான் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறி, அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உள்ளார். மேலும், செய்து முடிக்கப்பட்ட பணிக்கான ஊதியத்தைப் பெற, முதலில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகை பின்னர் திருப்பித் தரப்படும் என்றும் உறுதியளித்து உள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி, அந்த பெண், அவர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு, யூ.பி.ஐ. மற்றும் போன்-பே வழியாகப் பல பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.2,96,000-ஐ அனுப்பி உள்ளார். பின்னர் தொடர்பு கொண்ட போது, அவரது எண்கள் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, அப்பெண் ஆன்லைன் மூலம் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

