Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த ஒரு மணி நேரத்தில் மாவட்ட செயலாளர் பதவி. தவெகவினர் அதிர்ச்சி

0

'- Advertisement -

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அதிமுக பெறவில்லை. இதனால் அதிமுக நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்து வருகிறார்கள். தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், செங்கோட்டையனின் சம்பந்தியுமானவருக்கு, கட்சியில் இணைந்த ஒரு மணி நேரத்தில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Ad banner

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் எம்எஸ்எம் ஆனந்தன், எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி ராமலிங்கம், பச்சைமால், வெல்லமண்டி நடராஜன், சிவபதி, வைகைசெல்வன், வளர்மதி, கடம்பூர் ராஜூ மற்றுத் சந்தீப் ஆனந்த், முத்து வெங்கேடேஸ்வரன் தொள்ளமூர் கண்ணன், குமரன் ஆகியோர் தவெகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ளார். இதேபோல திருப்பூர் புறநகர் மாவட்ட கழகத்தின் செயலாளராக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பி சி மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் சிறப்பான விசயம் என்னவென்றால் நேற்று காலை வரை மகேந்திரன் அதிமுகவில் தான் இருந்தார். மாலை 5.30 மணியளவில் அவர் தவெகவில் இணைந்தார். இரவு 6.50 மணிக்கு வெளியான அறிவிப்பில் மகேந்திரனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.கட்சியில் இணைந்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன. தவெக கட்சி கட்டமைப்புக்காக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டம் என 4 மாவட்டங்களாக நிர்வாகம் செய்யப்பட்டது. இதற்கு 4 மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே இருந்தனர். தற்போது மகேந்திரனுக்காக புதிதாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர், திருப்பூர் மேற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 4 மாவட்டங்கள் இருந்தன. மகேந்திரனுக்காக மடத்துக்குளம் தொகுதியை மட்டும் உள்ளடக்கி திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மகேந்திரன் மடத்துக்குளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தவெகவில் இணைந்தது குறித்து மகேந்திரன் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமாக இந்த மகேந்திரன் பொள்ளாச்சி முன்னாள் எம்பியாக இருந்தார். அதிமுகவில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்தார். கிரவுண்ட் பாலிடிக்ஸில் சிறப்பாக செயல்படுபவர் என்கிற நற்பெயர் உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் பேரன் மிதிலேஷ், மகேந்திரன் மகள் விது பிரதிஷா ஆகியோருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது ..

செங்கோட்டையனின் சம்பந்தி வீட்டினர் என்பதாலேயே கடந்த சட்டமன்ற தேர்தலில் மகேந்திரனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் இருந்தார். கட்சியில் அவருக்கு இருந்த ஒரே ஆதரவு வேலுமணி தான். அவரும் எடப்பாடியுடன் சண்டை போட்டு வருகிறார். செங்கோட்டையன் மூலம் தான் மகேந்திரன் தவெகவில் இணைந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு எதிராக வலுவான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளார்.

 

திடீரென்று அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியிருப்பது விஜய் ரசிகர் மன்றம்,விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகம் என படிப்படியாக தொடர்ந்து பணியாற்றி வரும் முதல்வர் விஜயின் தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.