திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காலி வீட்டுமனையில், 40 வயதான அப்புனு என்ற ரமேஷ் என்பவரின் உடல் வெட்டுக்காயங்களுடன் கொடூரமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது …
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமேஷிற்கும் செங்கல்பட்டைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை அந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் பலமுறை கண்டித்தும், எச்சரித்தும் இருவரும் தங்களது தொடர்பைக் கைவிடாமல் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் ரமேஷைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், புலிப்பாக்கம் பகுதியில் ரமேஷ் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடி உள்ளது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

