தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளை நேரடியாக எழுப்பத் தொடங்கியுள்ள பொதுமக்கள், திகைத்து நின்ற கரூர் எம்எல்ஏ
கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்?’ என பொதுமக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளை நேரடியாக எழுப்பத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி விவகாரத்தில், தவெக சட்டமன்ற உறுப்பினரை மக்கள் முற்றுகையிட்டுச் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்துள்ள வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. கரூரில் ஆய்வுக்காக சென்ற தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவை, அப்பகுதி பொதுமக்களும் பெண்களும் திடீரெனச் சுற்றிலும் வளைத்து முற்றுகையிட்டனர்.
தேர்தலின் போது தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் கொடுத்த வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.முற்றுகையிட்ட பொதுமக்கள் எம்.எல்.ஏ-வை நோக்கி, “தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்’ என்றுதானே முதலமைச்சர் விஜய் சொன்னார்? ஆனால், இப்போது கூட்டுறவு வங்கிக்குச் சென்று கேட்டால், மே 2025-க்கு பிறகு வாங்கிய கடன்கள் மட்டும்தான் தள்ளுபடி என்று அங்குள்ள அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள்.அப்படியென்றால், அதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கிய நாங்களெல்லாம் என்ன முட்டாளா? முதலமைச்சர் விஜய் மேடையில் பேசும்போது, ‘இத்தனை மாதங்களுக்குள் கடன் வாங்கியிருந்தால் மட்டும்தான் தள்ளுபடி செய்வோம்’ என்று ஏதேனும் நிபந்தனைகளைச் சொன்னாரா? அவர் வெறும் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்றுதானே ஒட்டுமொத்தமாகச் சொன்னார்” என்று தங்களின் குமுறல்களை அடுக்கடுக்காகக் கொட்டித் தீர்த்தனர்.
மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், “இந்தக் குழப்பங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை? ஐந்து மாதங்களாக மக்கள் வங்கிக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கும் சூழலில், ‘கொஞ்சம் பொறுங்கள், நாங்கள் படிப்படியாகத் தள்ளுபடி செய்கிறோம்’ என்று அரசிடமிருந்து ஒரு முறையான பதில் அறிக்கை கூட இதுவரை ஏன் வெளியாகவில்லை?” என்று கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களின் இந்தத் திடீர் கேள்விகளாலும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவெக எம்.எல்.ஏ சத்யா திகைத்துப் போனார். பின்னர் நிலைமையைச் சமாளிக்க முயன்ற அவர், “மக்களுடைய குறைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இப்போது இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதை முழுமையாகவே உங்களுக்குப் பண்ணிக் கொடுக்கிறோம்”என்றார். இது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.

