இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது புறமுதுகு காட்டி ஓடியவன் நான் கிடையாது. உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்றத்தில் பேசுவதை முடக்கவே கைது நடவடிக்கை எனவும், மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் எனவும் திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.மேலும் இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது புறமுதுகு காட்டி ஓடியவன் நான் கிடையாது என்றும் கூறினார்.
விஜய், பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை 10.50 மணியளவில் சென்னையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சாலை மார்க்கமாக போலீஸ் வாகனத்திலேயே தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட உதயநிதியிடம் இரவு 7 மணியளவில் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 1 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அப்போது அவர் கூறியதாவது:-
இரட்டை அர்த்தத்தில் நான் எதுவும் பேசவில்லை. விவசாயிகளின் பிரச்சினையைதான் பேசினேன். பெண்களை தாழ்த்தி பேசும் எண்ணம் என் மனதில் துளி கூட கிடையாது. வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம். இந்த கைதுக்கு நான் பயப்பட மாட்டேன். பொய் வழக்கு போட்டு பயமுறுத்த பார்க்கிறது தவெக அரசு. காவிரிக்கு தண்ணீர் தர வேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
மீண்டும் மீண்டும் பேசுவேன். இந்த ஆட்சியை ஒரு ஆட்சியாகவே நான் பார்க்கவில்லை. நான் பேசியதை முழுதாக பார்க்காமல் கேட்காமல் சில தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நான் பேசியதை கேட்காமல் சில தலைவர்கள் கண்டித்தது வருத்தம் அளிக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் இதற்கான பதிலை தர வேண்டிய நேரத்தில் நிச்சயம் தருவார்கள்.
எனக்காக போராடி கைதானவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இருக்கக் கூடிய சிறிய வருத்தம் என்னவென்றால், நான் என்ன பேசினேன் என்பதை பார்க்கமால் தீர ஆராயாமல் என்னை கண்டித்து பதிவு போட்டு இருக்கிறார்கள். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
கைது நடவடிக்கைக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. இதனை நான் ஆட்சியாகவே கருதவில்லை. சர்க்கஸ் கூடாரமாகத் தான் பார்க்கிறேன். எனக்கு மனைவி இருக்காங்க.. மகள் இருக்கிறார்.. நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. காவிரி தண்ணீர் வர வேண்டும் என்று தான் பேசினேன்.. மீண்டும் பேசுவேன்.. நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி பேசுகிறார்கள். முதல்வருக்கு திமுகவின் வரலாறு தெரியவில்லை.கருணாநிதி பேரன் நான்.. ஸ்டாலின் மகன் நான்.. சட்டமன்றத்தில் பேசுவதை முடக்கவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன்.. இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது புறமுதுகு காட்டி ஓடியவன் நான் கிடையாது..” என்று பேசினார்.

