Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போன வாரம் கரண்ட் இல்ல..இந்த வாரம் தண்ணி இல்ல.திருச்சி அமைச்சர் ரமேஷ் தொகுதியில் தொடரும் அவலநிலை

0

'- Advertisement -

தவெக அரசின் மெத்தனப்போக்கால் குடிநீருக்குத் தவிக்கும் அமைச்சரின் தொகுதி மக்கள்- 2 நாட்களில் தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்- பொதுமக்கள் எச்சரிக்கை

Ad banner

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் திருச்சி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சொட்டு நீருக்குக்கூட வழியின்றி தவித்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு, அரியாவூர்,சத்திரப்பட்டி, இனாம் மாத்தூர், பெரியநாயகி சத்திரம், பாகனூர், கள்ளிக்குடி, புங்கனூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவை முழுமையாக அப்பகுதியில் உள்ள குளங்களையே நம்பியுள்ளது. காவிரியிலிருந்து மாயனூர் அருகே பிரியும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலமே இக்குளங்களுக்கு நீர்வரத்து கிடைக்க வேண்டும்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீரைத் திறக்காமல் நீர்வளத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிப்போய் ஆழ்துளைக் கிணறுகளும் செயலிழந்துவிட்டன. பொதுமக்கள் குடிநீருக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசின் இந்தத் தொடர் அலட்சியத்தைக் கண்டித்தும், உடனடியாக வாய்க்காலில் தண்ணீரைத் திறக்க வலியுறுத்தியும் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று திரண்டு, திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வண்ணான் கோவில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

சமீபத்தில் சத்திரப்பட்டி பகுதியில் மின்சார தட்டுப்பாட்டைக் கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதை நினைவில் கொண்டு, அசம்பாவிதங்களைத் தடுக்க 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வண்ணான் கோவில் பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

 

இந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தமிழ்மணி, வட்டாட்சியர் செல்வ கணேஷ், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நவலூர் குட்டப்பட்டியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது இன்னும் 2 நாட்களுக்குள் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டனர்.

அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிப்படி இன்னும் 2 நாட்களில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால், அடுத்த கட்டமாகப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் எச்சரித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.