அதிமுகவினரிடம் பல கோடி பணம் பெற்றதாக புகார் அளித்து விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி கிடைக்கவிடாமல் பாதிப்பை ஏற்படுத்த தவெகவில் உள்ள சிலரே ரகசிய வேலைகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று 37வது நாளில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெகவில் இணைந்துள்ள மாஜி அதிமுக அமைச்சராகவும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்த சி.விஜயபாஸ்கர் மீது அதிமுகவினர் அடுக்கடுக்கான புகார்களை கூறிக் கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் தான், விஜயபாஸ்கர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த போது, புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர்களிடம் வைப்புத் தொகையாக புதுக்கோட்டை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியனிடம் ரூ.5 கோடி, ஆலங்குடி தன.விமலிடம் ரூ.4.50 கோடி பணம் வாங்கியதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு புகாரை கிளப்பினர். இது பற்றி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பழனிவேல் பேட்டியும் கொடுத்திருந்தார். இந்த புகார்கள் குறித்து விஜயபாஸ்கர் கூறியபோது ‘நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை, கட்சி தலைமை சொன்னபடி தேர்தல் பணிகள் செய்தேன். வேட்பாளர்களை பொதுச் செயலாளர் எடப்பாடி தான் தேர்வு செய்தார். மாவட்டச் செயலாளர் தேர்வு செய்வதில்லை. அவர்கள் புகார் கொடுக்க வேண்டியது அதிமுக தலைமை மீது தான் என்மீது இல்லை’ என்றார்.

இந்த நிலையில் தான் ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தன.விமல் கொடுத்த பணத்தை மீட்க வேண்டும் என்று அதிமுக தலைமை கூறியதையடுத்து மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் கூட்டப்பட்டு தன.விமலின் பணத்தை விஜயபாஸ்கரிடம் இருந்து திரும்ப பெற கட்சி ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுப்பது, விஜயபாஸ்கர் தற்போது தவெகவில் இருப்பதால் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் விஜயபாஸ்கரும் பயணிப்பதால் அமைச்சரிடம் விஜயபாஸ்கர் குறித்த புகார் கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பணம் கொடுக்க தவறினால் அதிமுக போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி அமைச்சர் முகமது பர்வேஸை ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தன.விமல் மற்றும் அதிமுக கிழக்கு மா.செ ஞான.கலைச்செல்வன், ஒன்றியச் செயலாளர் துரை தனசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மோசடி புகார் கொடுத்ததுடன் ரூ.4 கோடி பணம், நிரப்பப்படாத காசோலையை பெற்றுத் தருவதுடன் ரூ.10 லட்சத்திற்கு எழுதிக் கொடுத்துள்ள அடமானப் பத்திரத்தை ரத்து செய்து தரவேண்டும் என்றும் விரிவான புகார் கொடுத்ததுடன் விளக்கமாகவும் கூறியுள்ளனர். இதனைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் முகமது பர்வேஸ், விசாரித்து தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், 3 நாட்களுக்கு முன்பே தன.விமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விஜயபாஸ்கர் மீது புகார் மனு அனுப்பியுள்ள நிலையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் மீண்டும் நேரில் புகார் கொடுக்கவும் உள்ளனர். 10 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படாத நிலையில் போராட்டம் நடத்தவும் வழக்கு போடவும் தயாராகி உள்ளனர். தவெகவிற்கு சென்றுள்ள விராலிமலை சி.விஜயபாஸ்கருக்கு விரைவில் கட்சி பதவி வழங்க உள்ளதாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேசியுள்ள நிலையில், இந்த புகார்களை பயன்படுத்தி விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி கிடைக்கவிடாமல் பாதிப்பை ஏற்படுத்த தவெகவில் உள்ள சிலரே ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்கின்றனர் தவெகவினர்.

