அரசியல் ரீதியாக எதிர்க்க துணிவில்லாமல் இது போன்ற சோதனைகளில் ஈடுபடுகிறது தவெக அரசு .சோதனைக்கு பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற வகையில் விசாரணை நடத்தக் கூடாது- அன்பில் மகேஷ்
‘டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற வகையில் விசாரணை நடத்தக் கூடாது- அன்பில் மகேஷ்
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே தற்போது சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷின் இல்லத்தில் இன்று காலை சுமார் 7.00 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையைத் தொடங்கினர். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த அன்பில் மகேஷின் காரும் வீட்டிற்குள் எடுத்துச் செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
சுமார் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை, பிற்பகல் 3.40 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-
கடந்த மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை 7.40 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை 10 மணி நேரத்துக்கும் மேலாக எனது வீட்டில் சோதனை நடத்தினர். வீடு முழுவதும், அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக வைத்திருந்த ஆவணங்களையும், அனைத்து மாவட்டங்களுக்கும் ஆய்வுக்காகச் சென்றபோது வைத்திருந்த ஆவணங்களையும் போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர். கண்டிப்பாக நான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். எங்களுக்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை.
சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசினால் அடுத்த நிமிடமே சோதனை நடத்துகிறீர்கள். முதலமைச்சர் ஹிட்லர் போல் இருக்கிறார் என்று நான் கூறியிருந்தேன். அவருடன் இருக்கும் அமைச்சர்களும் பொய் சொல்வதையே வேலையாக வைத்துள்ளனர் என்றும் விமர்சித்திருந்தேன்.
ரூ.1,200 கோடிக்கு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகக் கூறுகிறீர்கள். கஜானா காலியாக இருப்பதாகவும் கூறுகிறீர்கள். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கட்டிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக முழுமையாகப் பயன்படுத்தாமல் ஆங்காங்கே பயன்படுத்தி வருகின்றனர். அதில் சில கோடி ரூபாய் செலவு செய்தால் அதையே முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, ஆளும் கட்சியின் முகத்தில் கரியை பூசும் தேர்தலாக அமைய வேண்டும் என்று நேற்று தாராபுரத்தில் பேசியிருந்தேன். இதுபோன்று நான் தொடர்ந்து பேசி வருவதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சந்தேகத்தின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு, விவகாரத்தைத் திசைமாற்றும் முயற்சி நடைபெறுவதாக நான் கருதுகிறேன்.
வரும் 18ஆம் தேதி ஆஜராகி பதில் அளித்துவிட்டு, நேராக தாராபுரம் சென்று தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடுவேன். இடைத்தேர்தலில் வெற்றியை கண்டிப்பாக நிலைநாட்டுவோம்.
இந்தச் சோதனைக்குப் பின்னால் யார், யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். காலம் வரும்போது அவர்களுக்கு மிகப்பெரிய பதிலை அளிப்பேன். இதுபோன்ற சலசலப்புகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.
என்னிடம் விசாரணை செய்யவில்லை. வீட்டில் சோதனை தான் செய்தார்கள். எங்கள் வீட்டில் என்ன என்ன ஆவணங்கள் எடுத்து செல்கிறோம் என்பது குறித்து கையெழுத்து வாங்கி சென்றார்கள்.
என்ன பொய் வழக்கு போட்டாலும் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்தில் உண்மையை நிலைநாட்டுவோம்.
காவல்துறையினர் விசாரிக்கும் பொழுது நேர்மையாக செயல்பட வேண்டும். காவல்துறையினர் அன்பாக மிரட்டுவது போல் மிரட்டாமல் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.
அரசியல் ரீதியாக எதிர்க்க துணிவில்லாமல் த.வெ.க அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
காவல்துறையினர் விசாரணையை முறையாக நடத்த வேண்டும். ‘டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற வகையில் விசாரணை நடத்தக் கூடாது.
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சட்டமன்றத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். அதற்கு அடுத்த நிமிடமே அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மிஷா கைது தொடர்பாக கொச்சைப்படுத்திப் பேசியபோது, கழகத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக அதற்கும் ஒரு வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யப்படவில்லை.
நிதியமைச்சர் சட்டப்பேரவையில் ‘லஞ்சம் கொடுத்துள்ளேன்’ எனக் கூறியதற்கு, அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். அதனை இந்த அரசு செய்ய வேண்டும். இந்தச் சோதனையை நான் ஓர் இயலாமையாகத்தான் பார்க்கிறேன்.
இந்த இயக்கத்தில் ஒரு அன்பில் மகேஸ் இல்லை. பல அன்பில் மகேஸ் இருக்கிறார்கள். போராட்ட குணம் உள்ள பல இளைஞர்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் ஏதாவது மைலேஜ் எடுக்கலாம் என நினைத்தால் திமுகவினரிடம் அது ஒருபோதும் நடக்காது என்றார்.
இந்த சோதனையின் போது முன்னாள் அமைச்சர் கே என் நேரு மூன்று முறை மகேஷ் வீட்டுக்கு வந்தார் அவரை போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

