Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

364 ரவுடிகளை நேரில் அழைத்து வார்னிங் கொடுத்த திருச்சி எஸ்பி

0

'- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

Ad banner

இந்த நிலையில் திருச்சியில் 364 ரவுடிகளை அழைத்து எச்சரித்து இருக்கிறார் திருச்சி மாவட்ட எஸ்பியான செல்வ நாகரத்தினம்.

தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருந்த நிலையில், மாலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

அப்போது போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக மாவட்ட எஸ்பிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என சொல்லி இருந்தார். இதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள எஸ்பிகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது .

திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை ஏ+, ஏ, பி, சி என 4 வகைகளாக பிரித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்

இந்த நிலையில் திருச்சியில் 364 ரவுடிகளை ஒரே இடத்தில் வைத்து எச்சரித்து இருக்கிறார் திருச்சி எஸ் பி ஆன செல்வநாகரத்தினம். திருச்சியில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உட்கோட்ட காவல் அலுவலர்கள் மூலம் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் (ரவுடி பரேடு) ஆஜர்படுத்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அறிவுறுத்தியிருந்தார்.

அதனடிப்படையில் சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆஜர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஆஜர் அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு உட்கோட்டம் வாரியாக தணிக்கை செய்து. அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அதன்பிறகு, வந்திருந்த 364 சரித்திரபதிவேடு குற்றவாளிகளையும் மைதானத்தில் உட்கோட்டம் வாரியாக நிறுத்தி அவர்களுக்கு ரவுடி பரேடு நடத்தப்பட்ட விபரம் குறித்தும், அவரவர் குடும்ப சூழ்நிலை மற்றும் குழந்தைகளை கருத்தில் கொண்டு, எவ்வாறு அவரவர் நடத்தைகளை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றி கொள்ளாத பட்சத்தில் காவல் துறையின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியும் மிக தெளிவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துரைத்தார்.

அதன்பின்னர், ஒவ்வொரு சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பதிவேடுகளையும் அந்த காவல் ஆய்வாளர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. இதன்மூலம் வந்திருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தாங்கள் இனிவரும் காலங்களில் எந்தவிதமான குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் தத்தம் குடும்பத்தையும், குழந்தைகளையும் நல்ல முறையில் பராமரிப்பேன் என்ற நிலைப்பாட்டுடன் சென்றனர்.

இனி வரும் காலங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யாரேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஆஜர் அணிவகுப்பு (HS Parade) இதுநாள் வரை திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நடைபெறாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை எங்கும் நடைபெறாத இத்தகைய புதுமையான முயற்சி, குற்றவாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.