Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சொத்தைக் கேட்டு பெற்ற தாயை தாக்கிய மகனை, ஓட ஓட விரட்டி இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். நடராஜன் உடல்நலக் குறைவால் விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து தனது மனைவி இளஞ்சியத்துடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.

Ad banner

இந்த தம்பதியின் 28 வயது மகள் பிரியாவுக்கு அண்மையில் திருமணமானது. மேலும் 32 வயதான மகன் பார்த்திபன் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மது போதையில் கடந்த 7 ஆண்டுகளாக பெற்றோரிடம் தகராறு செய்தவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

சம்பாதிக்கும் அனைத்தையும் குடித்தே அழித்துள்ளார். குடிக்க பணம் இல்லாததால் ஆன்லைனிலும், வெளிநபர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், தனது தந்தை நடராஜனிடம் குடும்ப சொத்துகளை விற்று பணம் தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். ஈரோட்டில் வேலை பார்த்து வந்த பார்த்திபன் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போதே மது போதையில் இருந்தவர் தனது தாயார் இளஞ்சியத்திடம் நிலத்தை விற்றுப் பணம் தருமாறு மிரட்டி தாக்கியுள்ளார். அங்கிருந்த தந்தை நடராஜன், அவரை தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பிவைத்தார். மீண்டும் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் தந்தை நடராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் தாக்கியுள்ளார்.

இதனால் பொறுமை இழந்த தந்தை அருகில் கிடந்த இரும்புக் குழாயை எடுத்துப் பார்த்திபனை அடிக்க பாய்ந்துள்ளார். அதைக் கண்டதும் உயிர் பயத்தில் பார்த்திபன் தோட்டத்திற்குள் ஓடியுள்ளார். விடாமல் துரத்திச் சென்ற நடராஜன் மகனின் தலையில் பலமாகத் தாக்கியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஆத்திரத்தில் மகனை அடித்துக் கொன்றதை அறித்து அதிர்ச்சியடைந்த தந்தை, சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூராவிற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நடராஜனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப சொத்தை விற்று பணம் கொடுக்க கூறி, மது போதையில் பெற்ற தாயை தாக்கிய மகனை, ஓட ஓட விரட்டி இரும்புக் குழாயால் தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.