திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தண்ணீர் தேடி வந்த நான்கு காட்டெருமைகள் கிணற்றுக்குள் விழுந்ததில், இரண்டு காட்டெருமைகள் உயிரிழந்தன.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மற்ற இரண்டு காட்டெருமைகள் வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டன.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம், காரைக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி (வயது 65) என்பவருக்குச் சொந்தமான 70 அடி ஆழமுள்ள விவசாயக் கிணறு உள்ளது. நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு 7.45 மணி அளவில் அருகே உள்ள குமரிக்கட்டி மற்றும் கருப்பு ரெட்டியபட்டி மலைப்பகுதிகளில் இருந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக விளைநிலங்களுக்குள் புகுந்தன. அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு பெண் மற்றும் மூன்று ஆண் காட்டெருமைகள் (2 கன்றுகள்) என மொத்தம் நான்கு காட்டெருமைகள் கிணற்றுக்குள் தவறி விழுந்தன.
இரவு நேரம் மற்றும் தண்ணீர் அதிகம் இருந்ததால் காட்டெருமைகளை மீட்க முடியவில்லை
நேற்று காலை வனசரகர் மகேஸ் சுரன் தலைமையில் மீட்பு பணி தொடங்கியது. துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருந்ததாலும், ஆழம் அதிகமாக இருந்ததாலும் மீட்புப் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. அப்போது அதிகக் காயமடைந்து, தண்ணீரில் தத்தளித்து வந்த சுமாா் 4 வயது கொண்ட ஆண் காட்டெருமையும், சுமாா் 3 வயதுடைய பெண் காட்டெருமையும் கிணற்றிலேயே உயிரிழந்தது.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற இரண்டு ஆண் காட்டெருமை கன்றுகளை மீட்க
சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் கிருத்திகா, வனப் பாதுகாவலர் காஞ்சனா உள்ளிட்ட உயரதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.
உயிருடன் இருந்த காட்டெருமைகளை மீட்பது சவாலாக இருந்ததால், மதுரையிலிருந்து டாக்டர் கலைவாணன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். காட்டெருமைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, ராட்சத கிரேன் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கயிறுகள் மூலம் அவை பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டன. மீட்கப்பட்ட இரண்டு காட்டெருமைகளும் பின்னர் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.
உயிரிழந்த இரண்டு காட்டெருமைகளும் கிரேன் மூலம் மீட்கப்பட்டு, கால்நடை மருத்துவர் ரமேஷ் மூலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னர், கருப்பு ரெட்டியபட்டி வனப்பகுதியில் பள்ளம் தோண்டி அவை முறைப்படி புதைக்கப்பட்டன. இந்த மீட்புப் பணியின் போது மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டி, புத்தாநத்தம் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் வனத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.
தொடர்நது வனப்பகுதியிலிருந்து விளைநிலங்களை தேடி வரும் காட்டெருமைகள் கிணற்றில் தவறி விழுவதை வனத் துறையினர் தடுக்கும் வகையில் வனப்பகுதியில் உரிய தண்ணீா் நிலைகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

