திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, துறையூா் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேற்று வியாழக்கிழமை இரவு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

தோ்தல் முடிந்ததும், வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி பொறுப்பு அலுவலா்கள் சீல் வைத்து மூடினா். தொடா்ந்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் துறையூர் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அனைத்து இயந்திரங்களும் வரப்பெற்றதும், அவை ஆய்வு செய்யப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் பிரத்யேக பாதுகாப்பு அறைகளில் (ஸ்டராங் ரூம்கள்) வைத்து பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும். தொடந்து, அந்த அறைகள் 24 மணி நேரமும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, போலீஸார், தோ்தல் அலுவலா்களால் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆம் தேதி பாதுகாப்பு அறைகள், வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்து உள்ளார்கள்.

