Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.10 லட்சம் பறிமுதல் .

0

'- Advertisement -

திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் நேற்று திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.10 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Ad banner

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்கவும், கண்காணிக்கவும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்படி, திருச்சி திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரிய சூரியூா் சாலையில் நாகலட்சுமி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் நேற்று திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த, திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பிரியங்கா நகா் விஸ்தரிப்புப் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழில் செய்து வரும் ராமகிருஷ்ணன் என்பவரது காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அவா், தனது தொழிலுக்குரிய பொருள்கள் வாங்குவதற்காக ரூ. 2 லட்சம் பணத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்து, திருவெறும்பூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் காா்த்திகேயனிடம் ஒப்படைத்தனா். அவா் அந்தப் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

பெரம்பலூரில் ரூ. 4.10 லட்சம் பறிமுதல்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளா் ரமேஷ் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சேலத்திலிருந்து சுவாமிமலை நோக்கிச் சென்ற காரை வழிமறித்து சோதனையிட்டனா்.

இதில் காா் ஓட்டுநா் விவேகானந்தா், உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ 1.10 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளா் ரம்யா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா் நேற்று திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, குன்னம் அருகேயுள்ள பரவாய் கிராமத்திலிருந்து தொண்டமாந்துறை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொண்டமாந்துறையைச் சோ்ந்த அசோக் என்பவரிடமிருந்து ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.10 லட்சம், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு. அனிதாவிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

 

இதேபோல, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளக்காலிங்கராய நல்லூா் அருகே மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் நேற்று திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

 

அப்போது, அந்த வழியாக காரில் வந்த சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், அம்மாபாளையத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (வயது 54) உரிய ஆவணங்களின்றி ரூ. 1 லட்சத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், அதை குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ந. சக்திவேலிடம் ஒப்படைத்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.