Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரபல கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ஹார்ட் டிஸ்க் திருட்டு. திருச்சி ராம்ஜி நகரில் பெங்களூர் போலீசார் .

0

'- Advertisement -

கன்னட நடிகரும் இயக்குனருமாக இருப்பவர் ரவி கவுடா. இவர் நடித்து இயக்கி உள்ள ‘I am God’ என்ற திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது.

 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டிருந்தார். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நண்பரும், மைசூர் நகர நிர்வாகத்தின் (MUDA) முன்னாள் தலைவருமான பசவகவுடாவின் மகன்தான் ரவி கவுடா என்பது கவனிக்கத்தக்கது.

 

இந்த நிலையில் நடிகர் ரவி கௌடா தனது காரை பெங்களூரு விஜயநகர் பகுதியில் நிறுத்தி இருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு காரை எடுக்க வந்தபோது காரின் கண்ணாடி உடைந்திருப்பதை பார்த்து ரவி கௌடா அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரின் உள்ளே இருந்த ஒரு ஹார்ட் டிஸ்க், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது. அப்போதுதான் மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து ஹார்ட் டிஸ்க் மற்றும் பணத்தை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.

 

மர்ம நபர்கள் திருடிச் சென்ற ஹார்ட் டிஸ்கில் ‘I am God’ படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை எடிட் செய்து அதனை தயாரிப்பாளரிடம் காண்பிப்பதற்காக ரவி கவுடா வைத்திருந்தார். இது குறித்து விஜயநகர் போலீசில் ரவி கவுடா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் காரின் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றது வீடியோவில் பதிவாகி இருந்தது.

 

திருச்சி ராம்ஜி கும்பல்..

 

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ரவி கவுடாவின் கார் கண்ணாடியை உடைத்து திருடியவர்கள் , தமிழ்நாட்டிற்கு தப்பி சென்றது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நடிகர் ரவி கவுடாவிடம் கைவரிசை காட்டியவர்கள் வழக்கமாக கார் கண்ணாடிகளை உடைத்து திருடும் திருச்சியை சேர்ந்த பிரபல ராம்ஜி திருட்டு கும்பலைச் சேர்ந்த ஜெயசீலன் மற்றும் அவரது மகன் என்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து திருச்சிக்கு விரைந்து சென்ற போலீசார் ஜெயசீலனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி இருக்கும் அவரது மகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

திருச்சி ராம்ஜி நகர் கும்பல், கர்நாடகா, தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, ஹைதராபாத் உட்பட பல்வேறு மாநிலங்களில் சொகுசுக் கார்களின் கண்ணாடிகளை உடைத்து பணம், லேப்டாப், செல்போன்கள் போன்றவற்றை திருடுவதில் கைதேர்ந்தவர்கள். இருண்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களைக் குறிவைத்து, கூர்மையான பொருட்களைக் கொண்டு கண்ணாடியை உடைத்து நொடிப்பொழுதில் பொருட்களைத் திருடி தப்பிச்செல்வது இவர்களின் பாணி. இதை வைத்துதான் ரவிகவுடா காரில் இருந்து பணம் மற்றும் ஹார்டு டிஸ்கை திருடியது திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என்று பெங்களூரு போலீசார் கண்டுபிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெங்களூரு இந்திராநகர் பகுதியில் நடைபெற்ற பல கார் கண்ணாடிகள் உடைப்பு மற்றும் லேப்டாப் திருட்டு சம்பவங்களிலும் இக்கும்பலைச் சேர்ந்த முரளி, செந்தில், மூர்த்தி, ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் செந்தில், முரளி, மூர்த்தி ஆகியோர் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

2015ஆம் ஆண்டு கன்னட இயக்குநர் எஸ். நாராயணனின் காரில் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் திருடப்பட்டது போன்ற பல்வேறு முக்கிய திருட்டுச் சம்பவங்களிலும் இக்கும்பலுக்குத் தொடர்பு இருந்துள்ளது. அண்மையில், ஆகஸ்ட் 2024ல் சென்னை அடையாரில் பேராசிரியர் நித்யா என்பவரின் காரில் இருந்து லேப்டாப் திருடிய வழக்கில், ராம்ஜி நகரின் பிரபல திருடன் பிரதீப் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவர் மீது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் திருட்டு வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.