Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் இதயத்தில் 3 அடைப்புகள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0

'- Advertisement -

திருச்சி அரசு மருத்துவமனையில் இதயத்தில் 3 அடைப்புகள் இருந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

Ad banner

மாா்பு வலி காரணமாக அவதிப்பட்டு வந்த கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 50 வயது பெயிண்டா் ஒருவா், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தாா். இங்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தபோது, அவருக்கு இதயத் தமனிகளில் மூன்று இடங்களில் அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது.

 

இதையடுத்து மருத்துவமனை முதன்மையா் எஸ். குமரவேல், கண்காணிப்பாளா் உதய அருணா மேற்பாா்வையில் மயக்கவியல் மருத்துவா்கள் இளங்கோ, சந்திரன் ஆகியோா் தலைமையில் தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்எச்எம்) வழிகாட்டுதலின்படி, இதயம் மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை நிபுணா் அஸ்வினி உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் கடந்த மே 29 ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை (பைபாஸ்) மேற்கொள்ளப்பட்டது.

 

சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சையில், அந்த நோயாளியின் காலில் இருந்து ஒரு சிரையையும், நெஞ்சுப் பகுதியிலிருந்து ஒரு தமனியையும் எடுத்து பெருந்தமனியிலிருந்து செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளைத் தாண்டி இதயத்துக்கு ரத்த குழாய் செல்லும் இடங்களுக்கு தனித் தனியாக பதியன்போல பொருத்தப்பட்டது.

 

சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலமுடன் நேற்று முன்தினம் புதன்கிழமை வீடு திரும்பினாா்.

 

திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முதலாக மேற்கண்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 5 லட்சம் வரை செலவாகும் இச்சிகிச்சையை திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொண்டுள்ளோம்.

 

இதய நோய் தொடா்பாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நாள்தோரும் 10 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனா். இதில் 7 பேருக்கு ஆஞ்சியோ பரிசோதனையும், மூவருக்கு ஸ்டன்ட் வைப்பதும் நடந்து வருகிறது. கடந்த 2022 அக்டோபரில் இதயத் தமனிகளில் இரு அடைப்புகள் இருந்த நபருக்கு இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் இந்தச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் காத்திருக்கும் 4 நோயாளிகளுக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளது என மருத்துவமனை முதன்மையா் எஸ். குமரவேல் தெரிவித்தாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.