மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணி நாளை தொடக்கம்
The demolition of the RockFort Railway Bridge
புதிய பாலம் கட்டும் பணிக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணி நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்தாண்டு மாா்ச் மாதம் இப்பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க இந்த வழியிலான போக்குவரத்து முடக்கப்பட்டது.
ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமானப் பணிகள் மந்தமாகவே காணப்பட்டன. மாநகராட்சி தரப்பில் பணிகளை விரைந்து முடித்தாலும், ரயில்வே நிா்வாகத் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், ரயில்வே நிா்வாகத்தின் சாா்பில், இருப்புப் பாதை செல்லும் பகுதியில் உள்ள பாலத்தின் கான்கிரீட் கட்டுமானத்தை முழுவதுமாக இடித்தும் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதமாகி வருவதை ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்தில் பேசினேன். மேலும், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை சனிக்கிழமை சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கைகள் தொடா்பாகப் பேசினேன்.
அப்போது மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் குறித்துக் கேட்டதில், இருப்புப்பாதை செல்லும் பகுதியில் உள்ள பாலத்தின் கான்கிரீட் கட்டுமானங்கள் இடித்து அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கும் என ரயில்வே கேட்ட மேலாளா் தெரிவித்தாா். மேலும், புதிய கட்டுமானப் பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி எனது கோரிக்கையை ஏற்று, விரைந்து அறிவிப்பு வெளியிட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் துரை வைகோ.