2-வது நாளாக தொடரும் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் எதிரொலி சிலிண்டர்கள் விலை உயருமா?
தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருச்சி அருகே இனாம்குளத்தூரில் உள்ள எரிவாயு உருளை நிரப்பும் மையத்திலும் லாரிகள் வேலைநிறுத்தத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை எல்பிஜி டேங்கா் லாரிகள் மூலம் வாடகை ஒப்பந்த அடிப்படையில் லாரி உரிமையாளா்கள் இயக்கி வருகின்றனா்.
இவா்களின் நலனுக்காக நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளா்கள் சங்கம் செயல்படுகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் டேங்கா் லாரி உரிமையாளா்கள் இணைந்துள்ளனா்.

இந்நிலையில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்ட புதிய வாடகை ஒப்பந்த விதிகளில் எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த விதிமுறைகளை தளா்த்தக் கோரி மூன்று கட்டங்களாக எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், நேற்று வியாழக்கிழமை முதல் தென்மண்டல அளவில் எல்.பி.ஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனா்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரில் உள்ள மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு உருளை நிரப்பும் (சிலிண்டா் பாட்லிங்க் பாய்ண்ட்) மையத்துக்கு வந்துள்ள லாரிகளும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட எரிவாயு லோடுகளை இறக்குவதற்கு லாரிகள் காத்திருக்கின்றன. புதன்கிழமை இரவு வரை லோடுகள் இறக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தம் தொடங்கி இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள் கூறுகையில், சங்கத்தின் சாா்பில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் லாரிகளில் இருந்து லோடுகளை இறக்குவதோ, ஏற்றுவதோ இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இனாம்குளத்தூரிலும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றால் மட்டுமே லாரிகளை வழக்கம்போல இயக்குவோம் என்று கூறினார் .
இதனால் தென் மாவட்டங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது .