திருச்சி எஸ் எம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமில்
தியான பயிற்சி முகாம்.
திருச்சி எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமினை சீராத்தோப்பு பாரதியார் குருகுலம் வளாகத்தில் எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி தாளாளர் வழக்குரைஞர் ரகுநாதன் துவங்கி வைத்தார். பாரதியார் குருகுல நிர்வாகி முருகானந்தம் முன்னிலை வகித்தார். எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.முகாமில் தியான பயிற்சி குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பயிற்சி அளித்து பேசுகையில்,
ஒவ்வொரு மனிதரும் அவரவர் வாழ்க்கையில் கற்ற கல்வி, பெற்ற அனுபவம், அனுபவித்த இன்பம், துன்பம் பயம், கவலை, நம்பிக்கை என ஒவ்வொருவரது வாழ்வும் அவரது அறிவு, உணர்வு, செயல், விழிப்பு நிலை போன்ற நிலைகளில் செயல்படுகிறது. ஒவ்வொருவரும் தன் உண்மையான தன்மையை உள் ஆய்வாக அறிவதற்கு தியான பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது கற்பனை, உணர்ச்சி கடந்த கால, நிகழ் கால அனுபவங்கள், எதிர்கால திட்டங்கள் என எண்ண அலைகளை கவனிக்க இயலும். உணர்வுகள், உள்ள கிளர்ச்சியால் நாம் எடுக்கும் முடிவும் முயற்சியும் நம்மை எந்த சூழலுக்கு இட்டுச் செல்கிறது என்பதையும் புரிந்து கொள்ள இயலும். இதனால் கோபம், ஆசை, எதிர்பார்ப்பு, இன்பம், துன்பம், அகங்காரம், அனுபவங்களை கடந்து அன்பு, அமைதி, ஆனந்தம் என ஒரு நிலைபட்ட தன்மையில் வாழ்க்கையை வாழ இயலும் என்றார்.
எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஸ்ரீதர் மாணிக்கம் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல், அடிப்படை மின்பொறியியல் பாடப்பிரிவு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.