திருச்சி ஜேம்ஸ் பள்ளி
மைதானத்தில் மாணவன் மயங்கி விழுந்து சாவு

மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி.
திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் விளையாடிய போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஜங்ஷன் அருகே அமைந்துள்ள ஜேம்ஸ் பள்ளியில் நேற்று (புதன்கிழமை) பகலில் 2 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர், விளையாட்டு வகுப்பையொட்டி பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 7 வயது மாணவன் ஒருவன் விளையாட்டை தொடராமல், மைதானத்தின் ஓரத்தில் போய் அமர்ந்துள்ளார். சக மாணவ, மாணவியர் விளையாட்டு வகுப்பு முடிந்தவுடன், அவரை வகுப்புக்கு செல்ல அழைத்துள்ளனர். ஆனால் அவர் அமர்ந்த நிலையிலேயே மூச்சு பேச்சற்று இருந்தது தெரியவந்தது.
உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவைú உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்ததும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கன்டோன்மென்ட் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

