மணல் மாபியாக்களுடன் தொடர்பு கொண்ட
25 போலீசார் ஒரே நாளில் ஆயுதப் படைக்கு மாற்றம்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.

திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீசார் துணையுடன் மணல் கடத்தல் நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி. வருண் குமாரின் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் தவிர அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலோடு கைகோர்த்து செயல்படுவது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த உதவி ஆய்வாளர் தவிர புகாருக்குள்ளான சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 25 பேரும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு நேரடியாக சென்று ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்தனர்.
ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் திருச்சி மாவட்டத்தின் பிற காவல் நிலையங்களில் மணல் கடத்தல் கும்பலோடு தொடர்பில் உள்ள போலீசாரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சமயபுரம் காவல் நிலையத்தில் போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டதால், ஆயுதப்படையில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.