டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் மண்ணைக் கல்வியது ஆஸ்திரேலியா . இது இந்தியாவுக்கு ஆபத்தா?
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம்பெற்றன.
இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இவ்விரு அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் யாருமே எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருக்கிறது.
21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் குரூப்-1 பிரிவில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. இந்த நிலையில் இந்திய அணி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தாலும், தற்போது ஒரு மிகப்பெரிய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நாளை திங்கட்கிழமை கடைசி போட்டியில் மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்று உறுதி. தோல்வியை தழுவினாலும் குறுகிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே இந்திய அணி மிகப்பெரிய தோல்வியை நாளை சந்தித்தால் அது ஆஸ்திரேலியா அணிக்கு கூடுதல் சாதகமாகவும், இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாகவும் போய் முடியும்.
உதாரணத்திற்கு சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா இது போன்ற போட்டிகளில் மிகவும் அபாயகரமான அணியாக மாறிவிடும். ஒருவேளை இந்தியாவை எளிய இலக்கில் சுருட்டி அதனை பத்து ஓவர்களில் எல்லாம் ஆஸ்திரேலியா எட்டி விட்டாலோ இல்லை ஆஸ்திரேலியா பெரிய இலக்கை எடுத்து இந்தியாவை எளிதில் சுருட்டி விட்டாலோ அவர்களுடைய ரன் ரேட் அதிகமாகிவிடும்.
இந்தியாவின் ரன் ரேட் அடி பாதாளத்திற்கு சென்று விடும். இப்படி ஒரு சூழலில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி மட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும். இதில் ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றியை பெரும் பட்சத்தில் இந்தியா தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கின்றது.
ஆப்கானிஸ்தானை விட வங்கதேசம் பலம் குன்றிய அணி என்றாலும் அவர்கள் மிகப்பெரிய தோல்வி சந்திக்காமல் சிறிய அளவில் தோல்வி சந்தித்தால் மட்டுமே இந்தியா, ஆஸி அணிகளுக்கு அது நன்மையை கொடுக்கும்.இதனால் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இந்த சுற்றில் மாறி இருக்கிறது.