

பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா நாளை திருச்சி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 4,500 போலீஸார்.
திருச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வருகையையொட்டி சுமார் 4,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை தரம் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ள புதிய முனையம் திறப்பு விழா நாளை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிடோர் பங்கேற்று புதிய முனையத்தை தொடங்கி வைக்கின்றனர்.
மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் 38 ஆவது பட்டமளிப்பு விழாவிலும் இருவரும் பங்கேற்று பட்டங்களை வழங்குகின்றனர்.
இந்நிகழ்வுகளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராமகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக தில்லியிலிருந்து பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா இருவரும் தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு வருகைதரும் இருவரும், விவிஐ பிக்கள் வரவேற்பறைக்கு வந்து அங்கிருந்து, 10.30க்கு புறப்பட்டு சாலைமார்க்கமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை அடைகின்றனர். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கி பிரதமர் உரையாற்றுகின்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையத்தை பகல் 12 மணிக்கு வந்தடைகின்றனர். பிறகு இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில் ரூ.1200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். அப்போது புதிய நலத்திட்டங்கள் பலவற்றுக்கும் அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டங்களை தொடங்கியும் வைகிறார். விழா முடிந்ததும் இருவரும் பகல் சுமார் 1.15 மணியளவில் திருச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷா ஆகியோர் திருச்சி வருகை காரணமாக திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை சாலையிலும் மற்றும் குறிப்பிட்ட இடங்களிலும், விமான நிலையம் மற்றும் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் 4,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், துணை ராணுவம், சிறப்பு பாதுகாப்பு படையினர், கமாண்டோ படையினர், அதிரடிப்படையினர் திருச்சியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜி.கார்த்திகேயன், துணைத்தலைவர் பகலவன், மாநகர காவல் ஆணையர் ந. காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார், விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். செல்வம் மற்றும் பல்வேறுதுறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கடந்த இரு நாள்களாக விமான நிலையம், பல்கலைக்கழக வளாகங்களில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.
இன்று முதல் நிகழ்ச்சி நடைபெறும் இரு இடங்களிலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு நடைமுறைக்கு வருகின்றன.

