சிறைவாசிகளின் மனிதநேயம், நற்பண்புகள் வளர சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக மாற ரூ.10ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை திருச்சி சிறைகைதிகளுக்கென தானமாக வழங்கிய பள்ளி மாணவி சுகித்தா.
குற்றச்சம்பவங்கள் நாட்டில் பல அதிகரித்துவந்தாலும்… அவ்வாறு குற்றம் இழைப்பவர்கள் பலர் குற்றவாளியாக பிறப்பதில்லை.. கனநேரத்தில் கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் தவறிழைத்து விடுவதனாலும். சூழ்நிலை காரணமாகவும் பலர் கைதிகளாகிறார்கள்… அவ்வாறு சூழலும், சமூகத்தின் காரணமாக குற்றம் இழைத்தவர்கள் பலர் சிறைகளில் வாடுவதை நாம் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் வாயிலாக அறிந்துக்கொள்ள முடிகிறது.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் சுமார் ஆயிரத்து 500 தண்டணைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறைக்காலத்தை தண்டணைக்காலமாக எண்ணாமல் மனம்வருந்தி, திருந்திட ஏதுவாக மாறவேண்டும்; என்றநோக்கில் சிறைத்துறை சார்பில் சிறைவாசிகள் படித்து தேர்வெழுதவும், அவர்கள் தொழிற்பயிற்சி மையம் மூலம் தொழில் கற்றுத்தரவும், சிறைக்கைதிகளால் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டும் பயிரிடப்பட்டும் இயற்கையுடன் வாழவும், கைதிகளால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது என சிறைவாசிகள் மறுவாழ்வுக்கான பல்வேறு சீர்நோக்கு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
பலதேசிய தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர், மகாத்மா காந்தி சிறையில் இருந்தகாலத்தில் நிமிடம்கூட வீணடிக்காமல் புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார், அவ்வாறு போராட்டத்தையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு சிறைசென்ற பலர் சிறைவாசத்தால் உரமேறி, புடம்போட்ட தங்கமாக கவிஞர்களாக, அறிஞர்களாக, தலைவர்களாக வெளியேவந்தனர்…இதனிடையே சிறைவாசம் தம்மை புதுப்பித்துக்கொள்ள உதவவேண்டும் என்றநோக்கில், சிறைவாசிகளுக்கு கிடைக்கும் அதிகளவு ஓய்வுநேரத்தை புத்தகங்கள் வாசித்து தன்னை மெருகேற்றிக்கொள்ளவும், புத்தகங்களை ஆசானாக்கி அதன்மூலம் அறிவையும், ஒழுக்கத்தையும் பெருக்கிக்கொள்ள திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுக்கென நூலகம் மேம்படுத்தப்பட உள்ளது.
இதற்காக திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த மோகன் – பிரகதா தம்பதியினரின் மகளான, கின்னஸ் உலசாதனைக்குச் சொந்தக்காரரான 9ம் வகுப்பு பயின்றுவரும் சுகித்தா சிறைவாசத்திலுள்ளவர்களின் மனங்களிலும் வாசம் பெறவேண்டும் என்றநோக்கில், தான் சேமித்துவைத்திருந்த 5ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொண்டும், தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நல்விரும்பிகள் அளித்த புத்தகங்கள் என சுமார் 10ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அப்துல்கலாம், மகாத்மா காந்தி, சேகுவேரா உள்ளிட்ட தலைவர்களின் புத்தகங்கள் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட வரலாறு, கலாச்சாரம், கதைகள், கவிதைகள் மற்றும் அறிவியல், ஆன்மீகம், இலக்கியம் சார்ந்த புத்தகங்களை திருச்சி மத்திய சிறைச்சாலையின், சிறை மேலாளர் திருமுருகனிடம் நேரில் வழங்கினார்.
இதன்மூலம் சிறைச்சாலை அறச்சாலையாக மாறி அதன்மூலம் சிறைவாசிகள் மனமாற்றம் அடைவார்கள், அவர்கள் மீண்டும் இப்புவியில் மனிதநேயம் உடையவர்களாகவும், நற்பண்புகள் உள்ளவர்களாகவும் விளங்க வாய்ப்பு உள்ளதாக அதற்காக இந்த புத்தகங்களை சிறைவாசிகளுக்கு வழங்கினேன் என்றார் மாணவி சுகித்தா… சிறையில் நூலகம் திறக்கட்டும்… சிறைவாசிகளிடையே நல்லெண்ணம் மேலோங்கட்டும்… சிறைக்கதவுகள் மூடப்படட்டும்… அதற்காக புத்தகங்களை வழங்கிட்ட மாணவி சுகித்தாவின் எண்ணம் ஈடேறட்டும்…