Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருச்சியில் சிறப்பு பேருந்து நிலையம்:போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

0

 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியை மையமாக வைத்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு பயணிக்க துவங்கியிருக்கின்றனர்.
இதனை அடுத்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று சென்னை, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகளும், நாளைய தினம் 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் இன்று மாலை முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதத் துவங்கி இருக்கிறது. சென்னையில் இருந்தும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் பொதுமக்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு விடிய விடிய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சிறப்பு பேருந்துகளும் விடிய, விடிய பயணிகள் வருகைக்கு ஏற்ப இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருவார்கள் அவர்களையும் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வருடம் தோறும் விசேஷ பண்டிகையான தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைளில் திருச்சியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் திருநாளையொட்டி திருச்சியை மையமாக வைத்து வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் நெருக்கடி மற்றும் சிரமமின்றி சென்று வருவதற்கு வசதிக்காக திருச்சியில் 2 இடங்களில் அதாவது மன்னார்புரம் மற்றும் வில்லியம்ஸ்ரோடு சோனா மீனா தியேட்டர் அருகிலும் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மன்னார்புரத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது:

மதுரை, புதுக்கோட்டை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இது 17-ம் தேதி வரை செயல்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடுவதற்காக தங்கள் ஊர்களுக்கு செல்லவும் இது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு கூடுதல் பணி நிமித்தமாக மன அழுத்தம் ஏற்படலாம்.
அதே நேரத்தில் அவர்கள் ஓய்வும் எடுத்து பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க வேண்டும். பயணிகளுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். பொங்கல் சிறப்பு பாதுகாப்பு பணியில் கூடுதலாக 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளது. அந்த குறிப்பிட்ட இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாகன போக்குவரத்தில் விதி மீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், காலை, மாலை வேளைகளில் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மைதான். அதற்காக அருகில் உள்ள நடைபாலத்தை திறப்பது குறித்து கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.