அரசு உயர் நிலைப்பள்ளி காருகுடியில் இன்று “”தமிழோடு உறவாடு” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி நேரம் முழுமையும் ஆசிரியர்களும் மாணவர்களும் தூய தமிழில் பேச கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மாலையில் நடைபெற்ற விழாவிற்கு ஆசிரியர் தண்டபாணி வரவேற்புரையாற்றினார்.
தலைமை ஆசிரியர் கீதா தனது தலைமையுரையில், உலகத்தில் முதலில் தோன்றிய மனிதன் தமிழன் என்றும் ,அவன் பேசிய மொழி தமிழ் மொழி என்றும் குறிப்பிட்டார். ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கிய வளமுடைய தமிழை பேணிப் பாதுகாப்பது நமது கடமை என்றும் அவை கூறும் கருத்துக்களை வாழ்வில் பின்பற்றி நலமடைய வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
“இந்த நாள் எப்படி ” என்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தாங்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பல பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இன்று அறிந்து கொண்டதாகத் தெரிவித்தனர். பல சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொல்லைத் தேடிக் கண்டுபிடித்ததுப் பயன்படுத்தியது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாகத் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் சித்ரா மற்றும் சத்யா ஆகியோர் தங்களது சிறப்புரையில் தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்ததோடு அவர்கள் பள்ளி அனுபவங்களையும் அன்று இருந்த தமிழ்மொழியின் நிலை பற்றியும் இன்று இருக்கக்கூடிய தமிழ்மொழியின் நிலை பற்றியும் மாணவர்களிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகத் “தமிழோடு உறவாடு”என்ற போட்டியும் நடத்தப்பட்டது .
பிற மொழி கலக்காமல் தமிழில் இரண்டு நிமிடங்கள் பேசவேண்டும் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டு
பல தலைப்புகள் கொடுக்கப்பட்டன.
சிறப்பாகப் பேசிய மாணவ மாணவியருக்கு நூல்கள் பரிசளிக்கப்பட்டன.
ஆசிரியர் நிர்மலா நன்றியுரை கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தேவசுந்தரி மற்றும் தினேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் .
இந்த நிகழ்வில் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் பங்கேற்றனர்.