திருச்சி அதிமுகவைச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா பாண்டியன் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் அணி தலைவராக இருந்து வருபவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன்.
இவரும் இவரது மனைவி டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன் இருவரும் அதிமுக சார்பில் எந்த ஒரு நிகழ்ச்சி, ஆர்ப்பாட்டம் என நடைபெற்றாலும் தவறாமல் கலந்து கொண்டு அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்
சித்த மருத்துவரான இவர் திருச்சி தில்லைநகரில் கார்த்திக் சித்த வைத்தியசாலா என்ற கிளினிக்கை நடத்தி வருகிறார். மேலும் இவர் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தியில் இருந்த சுப்பையா பாண்டியன் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட மனோகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கழக முதன்மை செயலாளரும், நகரபுற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
இன்று காலை அமைச்சர் கே.என்.நேரு வை சந்தித்த சுப்பையா பாண்டியன் பொன்னாடை அணிவித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பரவலாக திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த வகையில் திருச்சி அதிமுகவில் முக்கிய பிரமுகராக திகழ்ந்த சுப்பையா பாண்டியன் திமுகவில் இணைந்து இருப்பது திருச்சி அதிமுகவுக்கு பெரும் இழப்பாகும்.
ஏனெனில் டாக்டர் சுப்பையா அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர், சிறந்த பண்பாளர், சிறந்த சமூக சேவகர், இதுவரை சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திருச்சி வரும்போதெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வரவைத்து பூரண கும்ப மரியாதை மற்றும் ஆராத்தி எடுக்க செய்து அந்த நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட படுத்தக்கூடிய நபர் டாக்டர் சுப்பையா பாண்டியன் என்பது அனைவரும் அறிந்ததே.