Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மநீம கட்சியின் இணையவழி கலந்துரையாடல் நாளை நடைபெறுகிறது. அதிரடி நடவடிக்கைகளை தொடங்குகிறார் கமல்.

0

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தினமும் கட்சி அலுவலகத்துக்கு நேரில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே நிர்வாகிகளுடன் தனித்தனியாக அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார்.

இதற்கு அவர்கள் அளித்த பதில்களை குறித்து வைத்து கொண்ட கமல், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாளை அதிரடியாக தொடங்குகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணைய வழி கலந்துரையாடல் கூட்டம் நாளை (26-ந் தேதி) காலை 11 மணிக்கு நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆரோக்கியமும், பாதுகாப்பும், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கட்ட பயணம், கட்சிக் கட்டமைப்பினை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுதல் ஆகிய 5 முக்கிய வி‌ஷயங்கள் பற்றி கமல் கட்சி நிர்வாகிகளுடன் பேச இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியினர் அனைவரும் இணைய வழியின் வாயிலாக பங்கேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவிக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தேர்தல் தோல்விக்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் பலர் விலகினர். அந்த பதவிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

இது தவிர மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நிர்வாகிகள் பட்டியல் தயாராக உள்ளது. அதனை கமல்ஹாசன் நாளை வெளியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்தவரையில் கீழ்மட்ட அளவில் போதுமான கட்டமைப்புகள் இல்லை என்னும் குறை உள்ளது.

குறிப்பாக கிராமப்புறங்களில் கமல்ஹாசன் கட்சி இன்னும் அனைத்து தரப்பினரையும் சென்றடையவில்லை என்பதும் கட்சியினர் வைக்கும் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

அதற்கான முக்கிய அறிவிப்புகளும் நாளை வெளியாக உள்ளது.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கு கட்சியினரை தயார்படுத்தும் வகையிலும் நாளைய கூட்டத்தில் கமல்ஹாசன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த கட்ட பயணம் தொடர்பாக புதிய வியூகங்களை வகுத்து அது தொடர்பான அறிக்கையையும் கமல் வெளியிட உள்ளார்.

கொரோனா 2-வது அலை ஓயும் நிலையில், அடுத்த கட்டமாக 3-வது அலையும் வேகமாக வீசலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சி உறுப்பினர்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பாக பணியாற்றுவதற்கும் இணைய வழி கூட்டத்தின் போது பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டதாக அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது :

மக்கள் நீதி மய்யம் கட்சியை பல மடங்கு வலுப்படுத்த கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அவரது அரசியல் நடவடிக்கைகள் இனி வேகமெடுக்கும்.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களிடம் கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

அதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்லில் பெருவாரியான வெற்றியை பெற வேண்டும் என்று கமல் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.