நிகழாண்டின் முதல் சூரிய கிரகணம்
திருச்சி மண்டலத்தில் காணமுடியவில்லை
நேற்று நிகழ்ந்த இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணத்தை திருச்சி மண்டலத்தில் எங்கும் காணமுடியவில்லை.
இது குறித்து திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்க திட்ட இயக்குநர் ஆர். அகிலன் மேலும் கூறியது:
சூரியனை பூமி சுற்றி வரும் தளமும், சந்திரன் பூமியை சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று, 5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளன. சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையும், பூமி}சூரியன் உள்ள தளமும் 2 இடங்களில் சந்திக்கின்றன. இந்த புள்ளிகளில் சந்திரன் அமைந்திருக்கும்போது அமாவாசை ஏற்பட்டால் சூரிய கிரகணமும், பவுர்ணமி ஏற்பட்டால், சந்திர கிரஹணமும் நிகழ்கின்றன.
சூரியனை விட சந்திரன் மிகவும் சிறியது. இருப்பினும், அது பூமிக்கு அருகில் இருப்பதால் பெரிதாக தோன்றுகிறது. சந்திரனுக்கும் , பூமிக்கும் உள்ள தொலைவு போல், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு 400 மடங்கு அதிகம்.சந்திரனின் விட்டத்தை விட, சூரியனின் விட்டம் 400 மடங்கு அதிகம்.
எனவே தான் சூரியனும், சந்திரனும் வானில் ஒரே அளவு கொண்டவை போல தோன்றுகின்றன.இதன் காரணமாகவே, முழு சூரிய கிரஹணத்தின்போது சூரியனை, சந்திரன் முழுமையாக மறைக்கிறது. வெகு தொலைவில் சந்திரன் இருக்கும்போது, அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறிதாக இருக்கும். அப்போது கிரஹணம் நேர்ந்தால், சூரியனை, சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது.
சூரியனின் வெளி விளிம்பு, நெருப்பு வளையம் போல தெரியும். இதைத்தான் கங்கண சூரிய கிரஹணம் என்கிறோம்.
அதுபோன்ற இந்த ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரஹணம்தான் நேற்று நிகழ்ந்துள்ளது.
கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, கிரீன்லாந்து மேற்கு பகுதி, கனடா ஆகிய பகுதிகளில், கங்கண சூரிய கிரஹணத்தை காண முடிந்தது. பகுதி சூரிய கிரஹணமாக வட கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகள், ஆசியாவின் வட பகுதிகளில் தெரிந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசத்தில் மிகச் சிறிய அளவில் அதிலும், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண முடிந்தது.
தவிர வேறு பிற மாநிலங்களில் எங்கும் காணமுடியவில்லை.
இதுபோன்ற அரிய வான் நிகழ்வுகளை திருச்சி அறிவியல் மைய கோளரங்கத்தில் பொதுமக்கள் காண ஏற்பாடு செய்வது வழக்கம்.
பொதுமுடக்கம் காரணமாக ஏற்பாடு செய்யவில்லை. மேலும் திருச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த சூரிய கிரஙணத்தை காணவும் முடியவில்லை.
இது இந்திய நேரப்படி மதியம் 1. 42க்கு தொடங்கி மாலை 6. 41 மணிக்கு முடிந்துள்ளது. அதிக பட்ச கிரஹணம் 4.11 மணிக்கு நிகழ்ந்துள்ளது என்றார் அவர்.