மராட்டியத்தை உலுக்கிய கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பரவல் சீராக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வந்தாலும் அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே மேலும் கூறுகையில், “ கொரோனா 3-வது அலை எப்போது வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே, நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.
மாநிலத்தில் தொற்று மீட்பு விகிதம் 92 சதவீதமாக அதிகரித்து இருப்பது நல்ல அறிகுறியாகும். நகரங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் அதேவேளையில், கிராமங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.
தொற்று பாதிப்பு உயர்ந்ததும் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் காட்டிய உறுதிப்பாட்டிற்கு மராட்டிய மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா 3-வது அலை மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் மீண்டும் ஆக்சிஜன் பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இம்முறை நமக்கு ஒரு நாளை 1,700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சிறார்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அவர்களை பெரிய அளவில் பாதிக்காது என நிபுணர்கள் சொல்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அது நம் மூலமாகவே இருக்கும். எனவே, நாம் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். நாங்கள் விருப்பம் இல்லாமல் தான் ஊரடங்கை நீட்டிக்கிறோம்.
சுகாதார கட்டமைப்புகளை நாங்கள் மேம்படுத்துகிறோம். எனவே, தளர்வுகள் படிப்படியாகவே அறிவிக்கப்படும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஊரடங்கு உதவியாக இருந்திருக்கிறது.
ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்யக்கூடாது.
அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும் ”என்றார்.