கொரோனா கவச உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டது பாராட்டுகளை பெற்று வருகிறது
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கினாலும், தினசரி பாதிப்புகளில் தலைநகர் சென்னையை விட கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர், அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு அவர்ஆய்வு செய்தார்.
இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு மதியம் 12:30 மணியளவில், முதல்வர் ஸ்டாலின் கோவை சென்றடைந்தார். கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 வீதம் 50 கார்கள் இயக்கப்படும் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், கொரோனா கவச உடையான பிபிஇ கிட் உடை அணிந்து நோயாளிகளை சந்தித்து சிகிச்சைகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்.
முன்னதாக, வயது, உடல்நலம், தொற்றின் வீச்சு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், பல்வேறு மக்கள் நலப் திட்டங்களை அமல்படுத்தி பாராட்டுகளை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா வார்டுக்குள் சென்று ஆய்வு நடத்தினார்.
முதல்வர் ஒருவர் கொரோனா வார்டுக்குள் சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறியது இதுவே முதன்முறையாகும்.
இந்த நிலையில், “கொரோனோ வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்” என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
ஆனால், கொரோனா வார்டுக்குள் சென்று அவர் ஆய்வு நடத்தியது அதனை புறந்தள்ளி ஸ்டாலினுக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.
இதனிடையே, #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கை முறியடித்து தற்போது #westandwithstalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.