தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதுப் புது உச்சங்களை எட்டிவந்த நிலையில் தீவிர ஊரடங்குக்குப் பின்னர் பாதிப்பு எண்ணிக்கையில் சிறிய அளவில் சரிவு காணப்படுகிறது.
மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஊரடங்கால் பாதிப்பு விவரங்கள் எந்த அளவு உள்ளன, அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மதியம் கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.
“நோய் தொற்றை கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையில் கொரோனா பரவல் கிராமங்களில் அதிகம் இருக்கிறது.
அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சேலம், கோவையில் அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்று தனது முன்னுரையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள், சட்டமன்ற கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக்குழு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.
தமிழகத்தில் பாதிப்பு குறைந்தாலும் உடனடியாக தளர்வுகள் அறிவித்தால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என கூறப்படுவதால் தீவிர ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படலாம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.