அனைத்து பத்திரிக்கையாளர்களும் பயன்பெற வேண்டும். தமிழக அரசுக்கு அனைத்து பத்திரிக்கை சங்கங்கள் கோரிக்கை.
அனைத்து பத்திரிகையாளர்களும் பலன் பெற வேண்டாமா? தமிழக அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மரண ஓலங்களை அதிகமாக கேட்க வைக்கிறது. இதன் உண்மை நிலவரத்தை களத்திற்கே சென்று காட்சிப்படுத்தி பத்திரிகையாளர்கள் செய்திகளாக மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
அதேசமயம் அரசின் அறிவிப்புகள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு எடுத்துரைப்பதிலும், மக்களின் பிரச்சினைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு சேர்ப்பதிலும் பத்திரிகையாளர்களின் பங்கு அளப்பரியது. தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் களத்தில் நின்று செய்தி வழங்கி வந்த பத்திரிகையாளர்கள் பலர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும், அமைப்புகளும் போராடி வருகின்றன. அதிலும் குடும்பத்தின் ஆணி வேராய் இருந்த பத்திரிகையாளர்களின் இழப்பு அவர்களுக்கு நெருக்கமானவர்களை பெரும் நெருக்கடியில் நிற்க வைத்துள்ளது. பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அவர்களுக்கு கைகொடுக்க வேண்டியது பத்திரிகை நிறுவனங்களும், தமிழக அரசும் தான். இத்தகைய பெரும் நெருக்கடிக்கு மத்தியில் பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.
எனவே இவர்களுக்கு அரசின் சில சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பத்திரிகையாளர்களின் ஊக்கத் தொகை 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு தான் சிக்கல் ஆரம்பிக்கிறது.
முன்களப் பணியாளர்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பே முற்றிலும் பயனற்றதாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு செய்தி நிறுவனத்திலும் பணியாற்றும் பத்திரிகையாளர்களில் வெறும் 10 பேருக்கு மட்டுமே அரசு அங்கீகாரம் அட்டை வழங்கப்படுகிறது. அது 100 பேராக இருந்தாலும் சரி. 1,000 பேராக இருந்தாலும் சரி. அப்படியெனில் அந்த 10 பேர் மட்டும் தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களா? மற்றவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? பொதுவாக செய்தி நிறுவனத்தின் ஆசிரியர், உதவி ஆசிரியர், தலைமை செய்தியாளர் என உயர் மட்டத்தில் இருப்பவர்கள் 5 அங்கீகார அட்டைகளை வைத்துக் கொள்வர்.
எஞ்சிய 5 அட்டைகள் வெளியில் சென்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
அப்படியெனில் இவர்களுடன் இரவு, பகலாக பணியாற்றும் சக பத்திரிகையாளர்களை என்ன சொல்வது? அவர்களுக்கும் உரிய அங்கீகாரமும், சலுகைகளும் கிடைக்க வேண்டாமா? தமிழக அரசின் இந்த அறிவிப்பால் ஒவ்வொரு செய்தி நிறுவனத்திலும் 5 சதவீதம் பேர் கூட பயனடைய மாட்டார்கள்.
இதன்மூலம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் ஏராளமான பத்திரிகையாளர்களுக்கு அரசின் முறையான சலுகைகள் கிடைக்காமல் போய்விடும்.
எனவே அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள பலன்கள் எந்தவித நிபந்தனையுமின்றி கிடைக்க வேண்டும்.
அதேசமயம் டிஜிட்டல் ஊடகங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் சூழலில் அவர்களும் விரைவாக செய்திகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் செய்தி சேகரிக்க களத்திற்கே செல்கின்றனர். எனவே இந்த நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும் அரசின் பலன் கிடைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அது அனைத்து பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், டிஜிட்டல் ஊடகவியாளர்களும் பலன் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்று பல்வேறு பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.