புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண் பெடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது.
அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண் பெடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு, புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்க உள்ளார் என்று தெலுங்கானா கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.