பிக்சிங் டெண்டர், மோசடி
திருச்சி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி மீது புகார்
________________________
திருச்சி மாநில நெடுஞ்சாலை துறையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வருபவர் பழனி. ஓய்வு வயதை கடந்த நிலையில் இவர் ஒரு ஆண்டு காலம் பதவி நீட்டிப்பு பெற்று தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பிக்சிங் டெண்டர், செட்டிங் டெண்டர், பர்சன்டேஜ் டெண்டர் என பலவகையான டெண்டர்களில் கை தேர்ந்த இவர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் முறைகேடாக பிக்சிங் டெண்டரை செயல்படுத்த முயன்றபோது வசமாக சிக்கினார்.
தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் 495 கோடி ரூபாய் மதிப்பிலான ரோடு பணியில் விதிமுறை மீறல் இருப்பதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது. பல கட்ட விசாரணைக்கு பின்னர் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மோசடியாக டெண்டர் விட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனி மீது விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினர், எதிர் கட்சியினர் புகார் தெரிவித்தனர். ஆனால் இவர் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.மாறாக ஒப்பந்தம் நிறுவனங்களை மிரட்டி கடைசிகட்ட வசூல் வேட்டையில் தீவிரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

டெண்டர் இறுதி செய்து ஒப்பந்தம் கையெழுத்து போடுவதற்கு 2 சதவீதம் கமிஷன் கேட்பதும், ரோடு போடும் பகுதிக்கு மேற்பார்வையிட சென்று அங்கேயே ஒப்பந்த நிறுவனங்களை மிரட்டி பெரும் தொகையை பேரம் பேசி வாங்குவதும் பழனியின் வாடிக்கை. தனது மனைவி, வாரிசுகள் மற்றும் உறவினர்கள் பெயரில் இவர் சுமார் 50 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்திருப்பதாகவும் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனியின் லஞ்சம் வசூல் டெண்டர் முறைகேடு தொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, நெடுஞ்சாலைத்துறை செயலாளர், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதைப்போல் அறப்போர் இயக்கமும் பழனியின் பணி விதிமுறை மீறல் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த சொல்லி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
நெடுஞ்சாலை துறை ஊழியர் சங்கத்தினர் கூறுகையில்,” கண்காணிப்பு பொறியாளர் இதற்கு முன்பு பல பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். தனது பினாமியாக இரண்டு ஒப்பந்ததாரர்களை இவர் வைத்திருக்கிறார். எங்கே எந்த முக்கியமான வேலை என்றாலும் இவர்கள்தான் டெண்டர் போடுவார்கள். இவர்களுக்கு தான் முக்கியமான பணிகள் ஒதுக்கீடு செய்து தருவார். ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஏற்ப டெண்டர் விதிமுறைகளை மாற்றி விடுவார். நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் மோசடி, ஒப்பந்த நிறுவனங்களை மிரட்டி பணம் வசூலித்த விவகாரத்தில் சிபிஐ வசம் தமிழக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன், கோட்ட பொறியாளர் முருகபூபதி உள்ளிட்டோர் சிக்கினர். இவர்களைப் போல் கண்காணிப்பு பொறியாளர் பழனியும் சிக்கி யிருக்க வேண்டியது. ஆனால் இவர் நைசாக தப்பிவிட்டார். முதல்வரின் துறையில் கண்காணிப்பு பொறியாளர் பழனி டெண்டர் மோசடி செய்து வருவதை தடுக்க யாரும் முன்வரவில்லை. இவர் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.
புகார் அளித்த ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், ” டெண்டர் விதிமுறைப்படி பணிகளை நடத்தினாலும் ஏதாவது குறை சொல்லி பில் தொகையை நிறுத்தி விடுவேன் என கண்காணிப்பு பொறியாளர் பழனி நெருக்கடி கொடுத்து வருகிறார். இவரின் நெருக்கடியால் திருச்சி மண்டலத்தில் ரோடு, பாலம் பணி நடத்த முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. தனது பதவிக் காலம் நீடிக்க பட்டதால் இவரின் லஞ்ச வசூல் வேட்டை அதிகமாகிவிட்டது.இவரின் மோசடி தொடர்பாக சில ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் அளித்து இருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,” என்றனர்.