
எம் ஆர் எப் தொழிலாளர் வேலை நிறுத்தம்: அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்
பெரம்பலூரில் உள்ள எம்.ஆர். எப் டயர் தொழிற்சாலையில் கடந்த 2024 ஜனவரி முதல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள் குறித்து திருச்சி மற்றும் சென்னையில் 30-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகிறது. தொழிலாளர்கள் உற்பத்தி இலக்கை அதிகரித்துக் கொடுத்த நிலையிலும், கடந்த 36 மாதங்களாகச் சம்பள உயர்வு வழங்காமல் நிர்வாகம் உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டு வருகிறது. தொழிலாளர் துறை அதிகாரிகளின் அறிவுரைகளையும் நிர்வாகம் ஏற்பதில்லை.
இதன் காரணமாக, கடந்த ஜூலை 3-ஆம் தேதி முதல் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘வேலைநிறுத்தத்தைக் கைவிட்டால் மட்டுமே பேசுவோம்’ என நிர்வாகம் பிடிவாதம் காட்டி வருகிறது. மேலும், ஆலைக்கு வெளியே 300 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் கூடிப் போராட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையிலும், தமிழ்நாடு காவல்துறை அதற்கு அனுமதி மறுத்து வருகிறது. காவல்துறையின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு கண்டிக்கத்தக்கது.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்திற்கு உத்தரவிட வலியுறுத்தியும். எம்.ஆர். எப் டயர் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் திருச்சி மாவட்ட சிஐடியு சார்பில் வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி எம்.ஆர்.எப் சி.ஐ.டி. யு நிர்வாகி சிவப்பிரகாசம், சிஐடியு மாநில குழு உறுப்பினர் செல்வி,மாவட்டத் துணைத் தலைவர் சீனிவாசன்,
புறநகர் மாவட்ட செயலாளர் சம்பத், பன்னீர்செல்வம், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சந்திரன்,போக்குவரத்து சங்க மாணிக்கம் பெல் சிஐடி சங்க எம்.ஜி.குமார் ஆகியோர் பேசினர்.இதில் ஏராளமான எம்ஆர்எப் தொழிலாளர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

