டிச.முதல் வாரத்தில் பார்கள் திறக்க ஆலோசனை.பார் உரிமையாளர்கள் மகிழ்ச்சி.
டிச.முதல் வாரத்தில் பார்கள் திறக்க ஆலோசனை.பார் உரிமையாளர்கள் மகிழ்ச்சி.
கொரோனா ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தற்போது 4,800 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை.
கடந்த 8 மாதமாக பார்களுக்கு உரிமத்தொகை செலுத்தி வருவதாகவும், வாழ்வாதாரம் கருதி டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பார் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் இதுகுறித்த கடிதத்தை டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு அனுப்பினர்.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் தற்போது வருவாய் குறைந்துள்ளது. மேலும், பார்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என பார் உரிமையாளர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு வெளியிலும், சாலை ஓரங்களிலும் மது அருந்துவதை காண முடிகிறது. எனவே, கொரோனா வழிமுறைகளை கடுமையாக பின்பற்றி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. டோக்கன் அடிப்படையில், சமூக இடைவெளி ஆகியற்றை கடைபிடித்து வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது என கூறினார்.