காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவியை ஐட்டம் என கொச்சையாக விமர்சித்ததால் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வருத்தம் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கமல்நாத் தப்ரா என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பாஜக வேட்பாளர் இமார்தி தேவியை ஐட்டம் என கமல்நாத் கேவலமாக விமர்சித்தார். இந்த இமார்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு கட்சி தாவியவர். அவர் கூறுகையில் பாஜக சார்பில் போட்டியிடும் இமார்த்தி தேவியை போல ஐட்டம் கிடையாது. அந்த பெண்ணின் பெயரைக் கூட நான் சொல்ல விரும்பவில்லை.
அவர் ஒரு ஐட்டம் என உங்களுக்கு தெரியும். நான் யாரை ஐட்டம் என கூறுகிறேன் என்பது தெரியுமா என கூட்டத்தினரை பார்த்து கேட்டார். அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் இமார்தி தேவி என கூச்சலிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக கமல்நாத் மீது மத்தியப் பிரதேச பாஜக கட்சியினர் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெண்களையும், தலித் சமுதாயத்தினரையும் கமல்நாத் அவமதித்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து கமல்நாத் தற்போது தான் கூறியமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைவதோடு காணாமல் போகும் என பாஜக உணர்ந்துவிட்டது. 15 ஆண்டுகால ஆட்சியில் உண்மையான விஷயங்களிலிருந்து மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்.
நான் அவமரியாதையான கருத்தை சொல்லிவிட்டதாக பாஜகவினர் கூறுகிறார்கள். எந்த கருத்து? நான் பெண்களை மதிப்பவன். நான் கூறிய கருத்து அவமதிப்பதாக யாராவது கருதினால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.