Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஓ.பி.எஸ் தியாகியும் அல்ல, எடப்பாடி முதல்வரும் அல்ல, ஸ்டாலின் பேச்சு.

ஓ.பி.எஸ் தியாகியும் அல்ல, எடப்பாடி முதல்வரும் அல்ல, ஸ்டாலின் பேச்சு.

0

ஓ.பி.எஸ் தியாகியும் அல்ல, எடப்பாடி முதல்வரும் அல்ல, ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் நடக்க இருப்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, தமிழர்களை காக்கும் போர் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சியில் தி.மு.க. முப்பெரும் விழா நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக விழாவை தொடங்கி வைத்தார்.

கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் வைரமணி, அன்பில்
மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்திரப்பாண்டியன், ஸ்டாலின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில்
மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் இது. இந்த அமைச்சரவைக்குத் தலைமை தாங்கும் எடப்பாடி பழனிசாமியே
சி.பி.ஐ. விசாரணைக்கு உட்பட்டவர்தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. துணை முதல்-அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறார்
ஓ.பன்னீர்செல்வம். அவரை இப்போது எல்லோரும் தியாகி என்று தான் அழைக்கிறார்கள். ஏதோ அவருக்கு முதல்-அமைச்சர் பதவி தேடி
வந்துவிட்டதைப் போலவும், அதனை அவர் எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்துவிட்டதைப் போலவும் அவரை பாராட்டிக்கொண்டு
இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வே தோற்கப்போகிறது, தோற்கப்போகும் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமியே வேட்பாளராக இருக்கட்டும் என்று தந்திரமாக
நழுவிக்கொண்டார் பன்னீர்செல்வம். அதுதான் உண்மை. அதனால், பன்னீர்செல்வம் தியாகியும் அல்ல, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரும்
அல்ல என்பதை நடக்க இருக்கும் சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் காட்டத்தான் போகிறது. அது வேறு விஷயம். பன்னீர்செல்வம் மீது சொத்துக்
குவிப்புப் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதலில் கொடுத்தோம். அவர்கள் விசாரணை நடத்தவில்லை. எனவே சென்னை ஐகோர்ட்டை
நாடினோம்.

இப்படி முதல்-அமைச்சர் தொடங்கி அனைத்துத் துறை அமைச்சர்களும் ஊழல் புகாரில் சிக்கிய அரசாங்கம் தான் இந்த அ.தி.மு.க. அரசாங்கம்.
இந்த கொள்ளைக் கூட்டம் விரைவில் விரட்டப்பட இருக்கிறது. இத்தகைய ஊழல்கள், முறைகேடுகள், கொள்ளைகளில் மூழ்கிக் கிடப்பதால் தான்
மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாட்டுக்கான அனைத்து உரிமைகளையும் அடகு வைக்கிறது எடப்பாடி அரசு. ஏனென்றால் அவர்களது கழுத்து,
மத்திய அரசாங்கத்தின் கையில் சிக்கி உள்ளது.

தமிழகக்கோட்டையை எவ்வளவு சீக்கிரம் கைப்பற்றுகிறோமோ அவ்வளவு இருக்கிற உரிமைகளை பாதுகாக்க முடியும். புதிய கல்விக்
கொள்கையால் கல்வி உரிமை பறிபோய்விட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களால்
விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. குடியுரிமைச் சட்டத்தால் சிறுபான்மையினர் உரிமை சீக்கிரம் பறிபோகப் போகிறது. அண்ணா
பல்கலைக்கழகத்தைத் திருட முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசுப்பணிகள் அனைத்திலும் வெளி மாநிலத்தவரைக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். இந்தப் பணிகளுக்காக
விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களது விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றன. தமிழக பல்கலைக்கழகத்
துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு உரிமையை எந்த
வகையிலாவது தடுத்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்விக் கூடங்களுக்குள் நுழைய
விடாமல் தடுப்பதற்கான எல்லாத் தந்திரங்களையும் செய்கிறார்கள்.

இவை அனைத்தையும் தடுத்தாக வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க. தோள்களில் தான் சுமத்தப்பட்டு இருக்கிறது. இந்த உரிமைகளை
போராடியும் வாதாடியும் பெற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சட்டமன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், கோர்ட்டாக
இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எங்கும் எதிலும் தமிழர் உரிமைகளை, தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்.

நடக்க இருக்கிற தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்துக்காக தேர்தல் மட்டுமல்ல, தமிழர்களைக் காக்கும் பெரும் போர். தமிழர்களின் கல்வி,
வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர். அந்தப் போரில் வெல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.