
பிஸ்லெரி குடிநீர் மாதிரியில் புற்றுநோயை உண்டாக்கும் புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் ஆகிய ரசாயனங்கள் கண்டறியப்பட்ட செய்தி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக நாம் குடிக்கும் தண்ணீரில் இது போன்ற கேன்சர் ரசாயனங்கள் எப்படி உருவாகின்றன, அவை நமது உடலுக்குள் சென்றால் என்ன செய்யும், ஒரு பாட்டில் தண்ணீர் குடித்தாலே புற்றுநோய் வந்துவிடுமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
ரோமேட்: இது இயற்கையாகவே தண்ணீரில் நேரடியாக இருக்கும் பொருள் அல்ல. நிலத்தடி நீரில் இயற்கையாகவே புரோமைடு என்ற தாது இருக்கும். பாட்டில் குடிநீர் நிறுவனங்கள் தண்ணீரில் உள்ள கிருமிகளை அழிக்க ஓசோன் வாயுவைப் பயன்படுத்திச் சுத்திகரிப்பு செய்வார்கள். அப்போது, தண்ணீரில் உள்ள புரோமைடு, ஓசோனுடன் வினைபுரிந்து புரோமேட் என்ற ரசாயனமாக மாறுகிறது. அதிகமாக சுத்திகரிப்பு செய்யும் போது இது தண்ணீரில் அதிகமாகத் தங்கிவிடுகிறது.
பாலிநியூக்ளியர் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள்: நிலக்கரி, பெட்ரோல், டீசல், மரம் அல்லது பிளாஸ்டிக் போன்றவை முழுமையாக எரியாமல் புகையாக மாறும்போது உருவாகும் நச்சு ரசாயனங்களின் தொகுப்பே PAHs ஆகும். தொழிற்சாலைக் கழிவுகள், காற்று மாசுபாடு அல்லது பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பில் ஏற்பட்ட கலப்படம் மூலமாக இவை தண்ணீரில் கலக்க வாய்ப்புள்ளது.
இந்த இரண்டு ரசாயனங்களும் மனித உடலுக்குள் செல்லும்போது, உடலின் இயல்பான செயல்பாட்டைச் சிதைக்கும் தன்மை கொண்டவை:
இந்த ரசாயனங்கள் மிக அதிக அளவில் உடலுக்குள் சென்றால் மட்டுமே உடனடி அறிகுறிகள் தெரியும். குறிப்பாக, அதிக அளவு புரோமேட் உடலுக்குள் சென்றால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். தீவிரமான நிலையில் சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்படவும், காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதேபோல், PAHs அதிக அளவில் சென்றால் கண் எரிச்சல், தலைச்சுற்றல் மற்றும் ரத்த சிவப்பணுக்கள் சிதைவடைதல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
உடலில் உள்ள நல்ல செல்களைச் சேதப்படுத்தி, அவற்றின் மரபணுவில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் இந்த ரசாயனங்களுக்கு உண்டு. தொடர்ந்து உடலில் இவை சேரும்போது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை மெல்ல மெல்லப் பாதிக்கப்படத் தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய வாய்ப்புள்ளது.
இதுதான் பலரது முக்கியக் கேள்வி… அறிவியல் மற்றும் மருத்துவ ஆய்வுகளின்படி, ஒரு முறையோ அல்லது ஓரிரு பாட்டில்களோ இந்தத் தண்ணீரைக் குடிப்பதால் உடனடியாகப் புற்றுநோய் வராது.புற்றுநோய் என்பது ஒரே நாளில் உருவாகும் நோய் அல்ல. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் புரோமேட் மற்றும் சில வகை PAHs ரசாயனங்களைப் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை என வகைப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த ரசாயனங்கள் கலந்த தண்ணீரை மிக நீண்ட காலத்திற்கு தொடர்ந்து குடித்துக் கொண்டே இருந்தால் மட்டுமே வரும்.
தொடர்ந்து குடித்தால் மட்டுமே உடலில் இந்த நச்சுகள் சேர்ந்து செல்களில் மாற்றத்தை ஏற்படுத்திப் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக, நீண்ட காலப் பாதிப்பால் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, நுரையீரல் மற்றும் குடல் பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, இது குறித்து மக்கள் அதீதமாக பீதி அடையத் தேவையில்லை. ஆனால் உங்கள் அலுவலகங்களில் வாங்கப்படும் தண்ணீர் பிஸ்லெரி என்றால் நீங்கள் அதை தினமும் குடிக்க நேரிடும். அப்படிப்பட்ட நேரத்தில் அது உங்களுக்கு ஆபத்தாக மாறலாம்
பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் இத்தகைய ரசாயனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட துளிகூட அதிகமாக இருக்கக் கூடாது என்பதற்காகவே உணவு பாதுகாப்பு ஆணையம் இவ்வளவு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

