திருச்சி அருகே சக தொழிலாளி இல்ல காதணி விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பரிதாப பலி.மேலும் 2 பேர் உயிருக்கு ஊசல்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் வேகமாக மோதிய விபத்தில் அதில் பயணித்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த கூலி தொழிலாளர்களான பாவாடை, மாணிக்கம், சங்கிலி, ராஜேஷ், முருகன், சக்திவேல், சீதாராமன், சுப்பிரமணி, ராமலிங்கம், ராமர் ஆகிய 10 பேர் இன்று ஆம்னி வேனில் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியில் உள்ள சக தொழிலாளியான சுரேஷ் என்பவர் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவிற்கு சென்று உள்ளனர்.
விழா முடிந்த பின்னர் மீண்டும் அதே வேனில் பிற்பகல் திருக்காட்டுப்பள்ளிக்கு புறப்பட்டனர். வேனை ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஜம்புநாதபுரம் அருகே சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் மோதியது. வேன் வேகமாக மோதியதில் அதன் முன்பகுதி மடிந்து மரத்தில் சிக்கிக்கொண்டது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த பாவாடை, மாணிக்கம், சங்கிலி, ராஜேஷ், முருகன் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சக்திவேல், சீதாராமன், சுப்பிரமணி ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி முசிறி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த ராமலிங்கம் மற்றும் ராமர் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் டிஎஸ்பி (பொறுப்பு) சங்கர், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் முத்தையா, ஜம்புநாதபுரம் போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் சடலங்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக முசிறி மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பரிதாபமாக சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

