திருச்சியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக் காவலில் சிறை வைப்பு, 2வது நாளாக போலீஸ் குவிப்பு .
பிரதமர் மோடியை சந்திக்க முயன்ற
திருச்சியில் தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக் காவலில் சிறை வைப்பு 2வது நாளாக போலீஸ் குவிப்பு .
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வருகை தந்து சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ள நிலையில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளிக்க தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா கண்ணு ஆயத்தமானார்.
இதை அறிந்த காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, மாநில துனணத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் சென்னை செல்வதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக நேற்று மாலை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டு முன்பு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரண்டாவது நாளாக அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது பற்றி அய்யாகண்ணு கூறும்போது,
மேட்டூரில் தற்போது 28 டி எம் சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் விவசாயத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும். இதனால் பயிர்கள் வாடும் அபாயம் உள்ளது.
காவிரியில் மாதாமாதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் அதனை உதாசீனப்படுத்தி வருகிறது. இதனை பிரதமர் தான் தட்டிக் கேட்க வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமரிடம் மனு கொடுக்க திட்டமிட்டு இருந்தோம். இதை மோப்பம் பிடித்துக் கொண்டு போலீசார் எங்களை சென்னை செல்ல விடாமல் தடுத்து விட்டனர்.
கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பதால் கர்நாடக அரசும் ,மத்திய அரசும் தமிழக விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தபோது, இது இரு மாநில பிரச்சனை முதல்வர்தான் வழக்கு தொடர வேண்டும்.
நீங்கள் வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்க வேண்டி வரும் என பதிவாளர் கூறியதால் அந்த மனுவை நான் வாபஸ் பெற்று விட்டேன். அதைப்போன்று விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

