முதல் நாளில் வந்து விட்டது எனக் கூறிய நிதி அமைச்சர் அடுத்தநாள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என மாற்றி பேசுவீங்களா தங்கம் தென்னரசு கேள்வி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை தொடர்பான விவாதத்தின் போது, அரசு கருவூலத்திற்கு ரூ.15,000 கோடி வந்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார். கடந்த சுமார் 65–75 நாட்களில் துறை சார்ந்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் விளைவாக சுமார் ரூ.15,000 கோடி அரசு கருவூலத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வருவாய் அமைச்சகத்தின் ஒட்டுமொத்த முயற்சியின் விளைவு என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக சட்டப்பேரவை நிதி நிலை அறிக்கை விவாதத்தின் போது முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், 3 மாத காலத்தில் அரசாங்க கஜானாவிற்கு ரூ.15,000 கோடி எப்படி வந்தது.? எதன் மூலம் வந்துள்ளது.? என அடுத்தடுத்து கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கூறுகையில்,நான் ஏற்கனவே சொன்னது போல், கலால் வருமானம் மட்டுமே 1,500 கோடி ரூபாய் வந்துள்ளது. அதில், சிறப்புரிமைக் கட்டணம், பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம், லைசென்ஸ் மூலமான வரவு உள்ளிட்டவை அடங்கும். இவை, செயல்திறனை மேம்படுத்தியதன் மூலம் பெறப்பட்டது.மேலும், மோட்டார் வாகன வரியை எடுத்துக்கொண்டால், அதில் சுமார் 750 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.அது, ஃபேன்ஸி நம்பர் வழங்குவதற்கான கட்டணத்தை மாற்றியமைத்தது உள்ளிட்டவைகளிலிருந்து வந்தவை.அதோடு, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மூலம் சுமார் 5,000 கோடி ரூபாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் சொல்வது சரி தான், அது எதிர்பார்க்கப்படும் வருமானம் தான். ஆனால் வரத் தொடங்கிவிட்டது என கூறினார். இதைத்தொடர்ந்து திமுகவினர் குரல் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக 15 ஆயிரம் கோடி அரசு கஜானாவிற்கு வந்து விட்டதாக முதல் நாள் கூறிய நிலையில், அடுத்த நாளே வரும் என எதிர்பார்ப்பதாக மாற்றி பேசியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.

